LOADING...
3 நாட்களில் ஆப் டெவலப்பர் ஆகலாம்! தமிழக அரசின் சூப்பர் பயிற்சி: இப்போதே விண்ணப்பிக்கவும்
3 நாட்களில் ஆப் டெவலப்பர் ஆகலாம்; தமிழக அரசின் சூப்பர் பயிற்சி

3 நாட்களில் ஆப் டெவலப்பர் ஆகலாம்! தமிழக அரசின் சூப்பர் பயிற்சி: இப்போதே விண்ணப்பிக்கவும்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 02, 2026
07:12 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக இளைஞர்களைத் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தவும், அவர்களைச் சிறந்த தொழில்முனைவோராக மாற்றவும் தமிழ்நாடு அரசு ஒரு சிறப்பான திட்டத்தை அறிவித்துள்ளது. தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெறும் மூன்றே நாட்களில் மொபைல் ஆப்ஸ்களை உருவாக்குவது எப்படி என்பதற்கான சிறப்புப் பயிற்சியை வழங்க உள்ளது. சென்னையில் உள்ள இந்த அரசு நிறுவனத்தின் வளாகத்தில், வரும் பிப்ரவரி 4-6 வரை இந்த மூன்று நாள் முழுநேரப் பயிற்சி நடைபெற உள்ளது. பொதுவாக ஒரு ஆப்பை உருவாக்கப் பல மாதங்கள் மற்றும் கடினமான புரோகிராமிங் அறிவு தேவைப்படும். ஆனால், இந்தப் பயிற்சியில் 'நோ-கோடு' (No-Code) மற்றும் 'லோ-கோடு' (Low-Code) கருவிகளைப் பயன்படுத்தி, எளிய முறையில் ஆப் உருவாக்குவது கற்றுத்தரப்படும்.

பாடம்

நீங்கள் என்ன கற்றுக்கொள்வீர்கள்?

இந்தப் பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு நடைமுறை ரீதியான அனுபவங்களை வழங்க நிபுணர்கள் தயாராக உள்ளனர். இங்கு சாட்ஜிபிடி, கூகுள் ஜெமினி, ஜாப்பியர் மற்றும் கிளைட் போன்ற தளங்களை இயக்க கற்றுத் தரப்படும். மேலும், ஒரு சிக்கலுக்குத் தொழில்நுட்ப ரீதியாகத் தீர்வு கண்டு, அதற்கான ஆப்பை வடிவமைக்கவும், நீங்கள் உருவாக்கிய ஆப்பை முதலீட்டாளர்களிடம் எப்படிக் கொண்டு செல்வது என்பதற்கான நுணுக்கங்கள் கற்றுத் தரப்படும். இதற்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. 18 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம்

எப்படி விண்ணப்பிப்பது?

அடிப்படை கணினி அறிவு உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வெளியூர் மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கு ஏதுவாகக் குறைந்த கட்டணத்தில் விடுதி வசதிகளும் உண்டு. பயிற்சி முடிவில் தமிழக அரசின் அதிகாரப்பூர்வச் சான்றிதழ் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் www.editn.in என்ற இணையதளம் வழியாக இப்போதே பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு 9380221280, 8668100181 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement