"AI-யை நெறிமுறைப்படுத்துவது அவசியம்" - சுந்தர் பிச்சை!
சாட்ஜிபிடி-யின் வரவுக்குப் பின்பு, AI தொழில்நுட்பங்கள் குறித்த விவாதங்களும், அது குறித்த கருத்துக்களும் அதிகரித்திருக்கின்றன. ஒரு சாரர் AI தொழில்நுட்பங்களால் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து சிலாகிக்கும் வேளையில், மற்றொரு தரப்பினரோ அதானால் ஏற்படும் பாதகங்கள் குறித்து எச்சரிக்கிறார்கள். கூகுளின் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையும் வளர்ந்து வரும் AI தொழில்நுட்பங்கள் குறித்த தன்னுடைய கருத்துக்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசும் போது, "செயற்கை நுண்ணறிவு என்பது கவனமாகப் கையாளப்பட வேண்டிய ஒரு தொழில்நுட்பம். அதனை அவசரமாக பயனர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறோம். அதனைத் தவறாகப் பயன்படுத்தினால், அது ஏற்படுத்தும் பாதிப்புகள் ஏராளம்" எனத் தெரிவித்திருக்கிறார் அவர்.
AI தொழில்நுட்பப் போட்டி:
மேலும், அந்தப் பேட்டியில் அவர் பேசும் போது, "AI தொழில்நுட்பங்கள் திறன் என்ன என்பதை சாட்ஜிபிடி-யும், டால்-இ AI-யும் காண்பித்திருக்கின்றன. சிலிக்கான் வேலி முதல் சீனா வரை பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்த AI போட்டியில் பங்கெடுத்து தங்களுடைய தயாரிப்புகளை வெளியிட்டு வருகின்றன. AI தொழில்நுட்பம் எப்படியானது என்பது குறித்த முழுமையான பதில் நம்மிடம் இல்லை. ஆனால், அந்தத் தொழில்நுட்பம் தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. AI தொழில்நுட்பங்கள் மூலம் பாதகங்கள் ஏற்படாமல் தடுக்க, அவற்றை நெறிமுறைப்படுத்துவது அவசியம்." எனத் தெரிவித்துள்ளார்.