புதிய கேலக்ஸி ரிங் மற்றும் கேலக்ஸி வாட்ச் அல்ட்ராவை வெளியிட்டது சாம்சங்
கேலக்ஸி ரிங் என்ற விரல்களில் அணிவிக்கக்கூடிய சாதனத்தை சாம்சங் வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட் வாட்ச் போல் இயங்கும் இந்த சாதனத்தை மோதிரத்தை போல் விரலில் அணிந்து கொள்ளலாம். கேலக்ஸி ரிங் ஆனது நேர்த்தியான, குறைந்தபட்ச வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பயனர் அனுபவத்தை மேம்படுத்த பல மேம்பட்ட அம்சங்கள் இதில் உள்ளன. இந்த சாதனத்தின் அம்சங்களை பயன்படுத்த சந்தா தொகை கட்ட தேவையில்லை. இதன் பேட்டரி 7 நாள் வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை $399 டாலர்களாகும்.
கேலக்ஸி வாட்ச் அல்ட்ராவை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
சாம்சங் கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா என்பது சாம்சங் நிறுவனத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஸ்மார்ட்வாட்ச் ஆகும். இது 47 மிமீ டயல், டைட்டானியம் சட்டகம் மற்றும் 10 ஏடிஎம் வரையிலான வாட்டர் புரூப் சக்தியை கொண்டுள்ளது. இதன் பிரகாசத்தை 3,000 நிட்கள் வரை உயர்த்தி கொள்ளலாம். மேலும், உடற்பயிற்சிகளை உடனடியாக தொடங்க புதிய விரைவு பட்டன் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கடிகாரத்தினால் ஒருவர் தூக்கத்தில் மூச்சுத்திணறுவதை கண்டறிய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் தூக்கத்தில் மூச்சுத்திணறலை அடையாளம் காண தூக்க கண்காணிப்பு தரவைப் பயன்படுத்துகிறது. இதன் விலை $650 ஆகும்.