LOADING...
வாட்ஸ்அப்பில் 13 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான புதிய வசதி, பெற்றோர்கள் நிர்வகிக்கும் கணக்குகள் அறிமுகம்!
வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்பில் 13 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான புதிய வசதி, பெற்றோர்கள் நிர்வகிக்கும் கணக்குகள் அறிமுகம்!

எழுதியவர் Prasanna
Mar 12, 2026
01:42 pm

செய்தி முன்னோட்டம்

வாட்ஸ்அப் நிறுவனம் 13 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்காகப் பெற்றோர்களால் நிர்வகிக்கப்படும் கணக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது வாட்ஸ்அப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 13 ஆக உள்ள நிலையில், பாதுகாப்பான முறையில் சிறுவர்களும் இந்தச் செயலியைப் பயன்படுத்தும் வகையில் இந்த மாற்றம் கொண்டுவரப்படுகிறது. இந்த வசதியின் மூலம் பெற்றோர்கள் தங்களது வாட்ஸ்அப் கணக்கைப் பயன்படுத்தித் தங்கள் பிள்ளைகளுக்கான பிரத்யேகக் கணக்கை உருவாக்கி அதனைக் கண்காணிக்க முடியும். சிறுவர்களின் கணக்கில் யார் செய்தி அனுப்பலாம், யார் அவர்களைக் குழுக்களில் சேர்க்கலாம் போன்ற முக்கியக் கட்டுப்பாடுகளைப் பெற்றோர்களே தீர்மானிக்க இந்த அம்சம் வழிவகை செய்கிறது. இதன் மூலம் தேவையற்ற அந்நிய நபர்களின் தொடர்புகளில் இருந்து சிறுவர்களைப் பாதுகாக்க முடியும் என்று மெட்டா நிறுவனம் கருதுகிறது.

வாட்ஸ்அப்

டிஜிட்டல் உலகில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கணக்கை அமைப்பதற்குச் சில எளிமையான வழிமுறைகளை வாட்ஸ்அப் வழங்கியுள்ளது. இதில் பிள்ளைகளின் பெயர் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு, பெற்றோரின் கணக்குடன் அதனை இணைக்க வேண்டும். இவ்வாறு இணைக்கப்பட்ட பிறகு, பிள்ளைகள் அனுப்பும் மற்றும் பெறும் செய்திகளைப் பெற்றோர்கள் நேரடியாகப் பார்க்க முடியாது என்றாலும், அவர்களின் பாதுகாப்பு அமைப்புகளை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும். இந்த முன்னெடுப்பு டிஜிட்டல் உலகில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாகப் பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்க இது ஒரு பாதுகாப்பான தளமாக அமையும். தற்போதைய நிலையில் இந்த வசதி சோதனை முறையில் உள்ளதாகவும், விரைவில் உலகளாவிய பயனர்களுக்குக் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement