இன்ஸ்டா பயனர்களின் புகைப்படங்களை வைத்து ஏஐ படம் உருவாக்க தடை! மெட்டா அதிரடி முடிவு
செய்தி முன்னோட்டம்
சமூக ஊடக நிறுவனமான மெட்டா, இன்ஸ்டாகிராம் பயனர்களின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து, பிற பயனர்களின் படங்களை ஏஐ மூலம் உருவாக்கும் புதிய தொழில்நுட்ப வசதியை அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த வாரம் மெட்டா அறிமுகப்படுத்திய மியூஸ் இமேஜ் என்ற ஏஐ டூல் தவறான காரணங்களுக்காக இணையத்தில் வைரலானது. இன்ஸ்டாகிராமில் பொதுக் கணக்கு வைத்திருக்கும் எவரையும் ஒரு பிராம்ப்ட்டில் டேக் செய்வதன் மூலம், அவர்களின் முகத்தை வைத்து ஏஐ படங்களை எவர் வேண்டுமானாலும் உருவாக்க முடியும் என்ற இந்த வசதிக்கு ஆன்லைனில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
பயனர்கள் கோபம்
தனியுரிமை மீறல் மற்றும் பயனர்களின் கடும் கோபம்
இந்த ஏஐ அம்சம் பயனர்களின் அனுமதியின்றி இணைக்கப்பட்டு இருந்ததே இந்த மிகப்பெரிய சர்ச்சைக்கு முதன்மைக் காரணமாக அமைந்தது. அதாவது, தங்களின் புகைப்படங்களை மற்றவர்கள் ஏஐ மூலம் பயன்படுத்துவதை நுகர்வோர் விரும்பவில்லை என்றால், அவர்களே செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று கைமுறையாக அதனை மறுக்க வேண்டியிருந்தது. மேலும், ஒரு பயனர் பிறரது கணக்கைப் பயன்படுத்தி ஏஐ படம் உருவாக்கும் போது, சம்பந்தப்பட்ட நபருக்கு எந்தவித அறிவிப்பும் மெட்டா தரப்பிலிருந்து அனுப்பப்படவில்லை. இது பெண்களின் பாதுகாப்பு மற்றும் போலிப் பட உருவாக்கத்திற்கு வழிவகுக்கும் எனப் பலரும் அஞ்சினர்.
ஹாலிவுட்
ஹாலிவுட் முதல் கிளம்பிய எதிர்ப்புப் புயல்
இந்த ஏஐ விவகாரம் சாதாரண நுகர்வோரை மட்டுமின்றி ஹாலிவுட் வட்டாரத்தையும் கடுமையாகக் கொதித்தெழ செய்தது. டாம் குரூஸ், ஜெண்டயா மற்றும் மெரில் ஸ்ட்ரீப் போன்ற உலகப் புகழ்பெற்ற முன்னணி நட்சத்திரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிஏஏ என்ற பிரபல திறமை நுகர்வோர் நிறுவனம் மெட்டாவிற்கு எதிராகக் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஏஐ உள்ளடக்க உருவாக்கத்திற்கு மக்களின் புகைப்படங்களை அனுமதிப்பதை மெட்டா இயல்புநிலைத் தேர்வாக வைக்காமல், பயனர்கள் விரும்பினால் மட்டுமே அனுமதிக்கும் முறையைக் கொண்டு வர வேண்டும் என்று அந்த நிறுவனம் வலியுறுத்தியது.
தடை
எல்லையை மீறியதால் தடையை அமல்படுத்திய மெட்டா
பயனர்களின் இந்தத் தொடர் பின்னூட்டங்களைக் கேட்ட மெட்டா நிறுவனம், தங்களது புதிய முயற்சி இலக்கைத் தவறவிட்டுவிட்டதாகத் தனது அதிகாரப்பூர்வ பிளாக் பக்கத்தில் ஒப்புக்கொண்டுள்ளது. தற்பொழுது இந்த அம்சம் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதால், மெட்டா ஏஐ தளத்தில் இனி எவரது இன்ஸ்டாகிராம் கணக்கையும் டேக் செய்து புதிய படங்களை உருவாக்க முடியாது. ஏஐ துறையில் இதுபோன்ற தனியுரிமை சர்ச்சையில் சிக்கும் முதல் நிறுவனம் மெட்டா அல்ல. இதற்கு முன்பு ஓபன்ஏஐ மற்றும் எக்ஸ் தளத்தின் கிராக் ஏஐ மாடல்களும் இதேபோன்ற கடுமையான தனியுரிமைப் புகார்களை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.