AirFiber-ஐ விரைவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கும் ஜியோ!
செய்தி முன்னோட்டம்
கடந்த ஆண்டு தங்களுடைய புதிய ஏர்ஃபைபர் (AirFiber) சாதனத்தைக் காட்சிப்படுத்தியது ஜியோ. வரும் மாதங்களில் இந்தியாவில் அதனை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது அந்நிறுவனம்.
ஜியோவின் 5G நெட்வொர்க்குடன், இந்த சாதனத்தின் மூலம் 1 GBPS வரையிலான வேகத்தில் இணைய சேவை வழங்க முடியும்.
ஏர்டெல், ACT மற்றும் BSNL ஆகிய இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்குப் போட்டியாக, வயர்லெஸ் இணைய சேவை வழங்கும் இந்த சாதனத்தை சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வரவிருக்கிறது ஜியோ.
ஏற்கனவே தொலைத்தொடர்பு துறையில் அதிரடியாக நுழைந்து பெரும் சந்தைப் பங்கைப் பிடித்த நிறுவனம் ஜியோ. தொலைத்தொடர்பு சந்தையில் இதர சேவைகளிலும் தடம் பதிக்கவே இந்த புதிய திட்டத்தை முன்னெடுத்து வருகிறது அந்நிறுவனம்.
ஜியோ
இதன் பயன்பாடு எப்படி இருக்கும்?
இரண்டு வகைகளில் ஏர்ஃபைபரை வழங்கவிருக்கிறது ஜியோ.
ஒன்று நிலையான ரௌட்டர்கள் கொண்டு பயன்படுத்துவது. இந்த வகையில் வீட்டிற்குள் ரௌட்டர்களும், வீட்டின் மேலே ஆண்டனாக்களும் பொருத்தப்பட்டிருக்கும். ஆண்டனா மூலம் சிக்னல் பெறப்பட்டு, ரௌட்டர்கள் மூலம் நாம் வை-பையை பயன்படுத்த முடியும்.
மற்றொன்று வயர்லெஸ் ரௌட்டர்கள் போல, நாம் எங்கு சென்றாலும் கொண்டு செல்லும் வகையில் போர்டபிள் ஏர்ஃபைபர்.
இந்த ஏர்ஃபைபரைக் கொண்டு மிக அதிவேகமான இணைய சேவையை வழங்க திட்டமிட்டு வருகிறது ஜியோ.
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த ஏர்ஃபைபர் ரூ.6,000 விலையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதற்கான பிளான்கள் மாதம் ரூ.500-ல் இருந்து தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.