இன்ஸ்டாகிராமை டீனேஜர்களிடம் கொண்டு சேர்க்க கூகுள்-மெட்டா நிறுவனங்கள் கூட்டு
கூகுள் மற்றும் மெட்டா ஆகியவை யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் இளம் வயதினரைக் குறிவைத்து விளம்பரங்களை வெளியிட ரகசிய கூட்டு வைத்துள்ளதாக பைனான்சியல் டைம்ஸில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 மற்றும் 17 வயதுக்குட்பட்ட யூடியூப் பயனர்களுக்கு இன்ஸ்டாகிராமை விளம்பரப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள மெட்டா நிறுவனம், இதற்காக கூகுள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு சந்தைப்படுத்தல் திட்டத்தில் இணைந்து செயல்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் கூகுளின் விளம்பர அமைப்பில் "தெரியாது" என்று பெயரிடப்பட்ட ஒரு பயனர் குழுவை மையமாகக் கொண்டது எனக் கூறப்படுகிறது. இதில் பல 18 வயதுக்குட்பட்டவர்கள் உள்ளதாக நம்பப்படுகிறது. இது 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான விளம்பரங்களைத் தனிப்பயனாக்குவதையும் குறிவைப்பதையும் தடைசெய்யும் கூகுளின் சொந்த வழிகாட்டுதல்களுக்கு முரணாக உள்ளது.
திட்டம் குறித்த விரிவான விபரங்கள்
அறிக்கையின்படி, இந்த பைலட் மார்க்கெட்டிங் திட்டத்தைத் தொடங்க இரு நிறுவனங்களும் பப்ளிசிஸின் அமெரிக்க துணை நிறுவனமான ஸ்பார்க் ஃபவுண்டரியுடன் கூட்டு சேர்ந்தன. இந்த திட்டம் முதன்முதலில் கனடாவில் பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் தொடங்கப்பட்டது. மே மாதம் அமெரிக்காவில் சோதிக்கப்பட்டது. இதை உலகளவில் விரிவுபடுத்தவும், இன்ஸ்டாகிராம் மட்டுமல்லாது பேஸ்புக் போன்ற மெட்டாவின் பிற சமூக ஊடகங்களையும் விளம்பரப்படுத்தவும் திட்டமிடப்பட்டது. இவை சிறிய பைலட் புரோகிராம்களாக இருந்தபோதிலும், உயர்தர பிராண்ட் விளம்பரங்களை உள்ளடக்கிய மெட்டாவுடன் அதிக லாபம் தரும் உறவை வளர்ப்பதற்கான வாய்ப்பாக கூகுள் கருதுவதாக கூறப்படுகிறது.