கூகுள் மேப்ஸ் சேவையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தும் கூகுள்
இந்தியாவில் தங்களுடைய கூகுள் மேப்ஸ் சேவையில் பல்வேறு புதிய வசதிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தவிருக்கிறது கூகுள் நிறுவனம். அந்தப் புதிய வசதிகளில், லென்ஸ் இன் மேப் மற்றும் லைவ் வ்யூ உள்ளிட்ட சில வசதிகளின் அறிமுகங்கள் குறித்து முன்பே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது உலகளவில் இந்தியாவில் முதல் முறையாக புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது கூகுள். அதன்படி, அட்ரஸ் டெஸ்கிரிப்டர்ஸ் (Address Descriptors) என்ற புதிய வசதியை முதலில் இந்திய பயனாளர்களுக்கும், அதனைத் தொடர்ந்து பிற நாட்டு பயனாளர்களுக்கும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது கூகுள். இந்த வசதிகளை வரும் ஜனவரி மாதம் தொடங்கி தொடர்ந்து அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.
கூகுள் மேப்ஸ் சேவையில் புதிய வசதி:
கூகுள் தற்போது அறிமுகப்படுத்தவிருப்பதாக தெரிவித்திருக்கும் அட்ரஸ் டெஸ்கிரிப்டார்ஸ் வசதியின் மூலம், ஒரு குறிப்பிட்ட இருப்பிடத்தை கூகுள் மேப்ஸின் உதவியுடன் நாம் பகிரும் போது, அந்த இருப்பிடத்தைச் சுற்றியிருக்கும் ஐந்து முக்கிய இடங்கள் குறித்த தகவல்களும் இனி சேர்த்துக் காட்டப்படும். இதனை லேண்டுமார்க்காக பயனாளர்கள் பயன்படுத்தி, அந்தக் குறிப்பிட்ட இருப்பிடத்தை விரைவில் கண்டறிய முடியும் எனத் தெரிவித்திருக்கிறது கூகுள் நிறுவனம். இந்த அட்ரஸ் டெஸ்கிரிப்டார்ஸ் வசதியை இந்தியாவின் 75 முக்கிய நகரங்களில் முதற்ககட்டமாக வழங்கத் திட்டமிட்டிருக்கிறது கூகுள். அதனைத் தொடர்ந்து பிற நகரங்கள் மற்றும் சிறிய ஊர்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.