எலான் மஸ்க்கிற்கு அவரது சொந்த ஏஐ வைத்த செக்! ஸ்டார்லிங்க் குறைபாடுகளை பட்டியலிட்ட Grok AI சாட்பாட்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் தங்களது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையைத் தொடங்குவதற்கு கட்டுப்பாட்டு அமைப்புகளின் அனுமதியை பெற எலான் மஸ்க் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், அவரது சொந்த நிறுவனமான xAI உருவாக்கிய குரோக் (Grok) ஏஐ சாட்பாட், இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையை அனுமதிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் குறைபாடுகளை விரிவாகப் பட்டியலிட்டு, எலான் மஸ்க்கிற்கே அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. சமூக வலைதளங்களில் தற்போது இச்சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
தேசிய பாதுகாப்பு
தேசிய பாதுகாப்பு மற்றும் தரவு இறையாண்மை சார்ந்த அச்சங்கள்
பயனர் ஒருவர் எக்ஸ் தளத்தில் இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையை அனுமதிப்பதில் உள்ள தீமைகள் என்ன என்று குரோக் சாட்பாட்டிடம் கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த குரோக், "வெளிநாட்டு நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் செயற்கைக்கோள் நெட்வொர்க் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு சவாலாக அமையலாம்.
எல்லைப் பகுதிகளில் அவசர காலத்தில் சேவையை முடக்குவதிலோ அல்லது சட்டப்பூர்வக் கண்காணிப்புகளை மேற்கொள்வதிலோ இந்திய அரசிற்கு சிக்கல்கள் எழக்கூடும்" என இந்தியக் கட்டுப்பாட்டு அமைப்புகளின் பாணியிலேயே எச்சரித்துள்ளது.
அதிக கட்டணம்
ஜியோ, ஏர்டெல்லை விட அதிகக் கட்டணம் வசூலிக்க வாய்ப்பு
மேலும், இந்திய சாமானிய மக்களின் நிதி நிலையை சுட்டிக்காட்டிய குரோக் ஏஐ, "ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் ஆகிய இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் பிராட்பேண்ட் மற்றும் மொபைல் இணைய சேவைகளை விட ஸ்டார்லிங்கின் ஹார்டுவேர் உபகரணங்கள் மற்றும் மாதாந்திரச் சந்தா கட்டணங்கள் மிக அதிகமாக இருக்கும்.
இதனால் கிராமப்புற இந்தியர்களுக்கு குறைந்த விலையில் இணையம் கொண்டு சேர்க்கும் நோக்கம் நிறைவேறுவது கடினம்" எனவும் வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளது.
விவாதம்
இணையத்தில் குவியும் மீம்ஸ்களும் விவாதங்களும்
இதுமட்டுமின்றி, உள்நாட்டு தொலைத்தொடர்பு சந்தை பாதிக்கப்பட்டு ஒற்றை அமெரிக்க நிறுவனத்தை இந்தியா அதிகம் சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாவதையும் குரோக் சுட்டிக்காட்டியுள்ளது.
"எலான் மஸ்க்... உங்கள் ரகசியத் திட்டங்களை உங்கள் ஏஐ அம்பலப்படுத்திவிட்டது" என எக்ஸ் தளப் பயனர்கள் மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர்.
வெளிநாட்டு நிறுவனம் ஒன்று நாட்டின் முக்கியமான தகவல் தொடர்பு நெட்வொர்க்கை கட்டுப்படுத்த அனுமதிக்கும் முன் தகுந்த பாதுகாப்பு நெறிமுறைகள் அவசிய என்பதை இச்சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.