பயனர்களுக்கு விரைவில் இரண்டு மடங்கு வேகத்தில் 5ஜி சேவையை அறிமுகம் செய்கிறது ஏர்டெல்
செய்தி முன்னோட்டம்
ஏர்டெல் வாடிக்கையாளர்கள் விரைவில் இரண்டு மடங்கு வேகத்தில் 5ஜி இணையச் சேவையைப் பெற வாய்ப்புள்ளது. நிறுவனம் தனது மேம்பட்ட 5ஜி சேவையை வழங்குவதற்காக, இரட்டை முறை 5ஜி நெட்வொர்க்கை (Dual-Mode 5G) அறிமுகப்படுத்துவதற்கானத் தயாரிப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளது. இந்தச் சேவையானது, பயனர்களுக்கு நான்-ஸ்டாண்டலோன் (NSA) மற்றும் ஸ்டாண்டலோன் (SA) ஆகிய இரு 5ஜி நெட்வொர்க்குகளுக்கான அணுகலை வழங்கும். முதலீட்டாளர்களுடனான வருவாய் அழைப்பின் போது இந்தத் தகவலைப் பகிர்ந்த ஏர்டெல், இந்த மேம்படுத்தப்பட்ட 5ஜி சேவையை நாடு முழுவதும் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஏர்டெல்லின் நிர்வாக இயக்குநர் கோபால் விட்டல் பேசுகையில், இந்த இரட்டை முறை 5ஜி சேவையானது ஏர்பைபர் பயனர்களுக்கு இணைய இணைப்பை மேம்படுத்தும் எனத் தெரிவித்தார்.
13 பிராந்தியங்கள்
முதற்கட்டமாக 13 பிராந்தியங்கள்
ஆரம்ப கட்டமாக, ஏர்டெல் நாடு முழுவதும் 13 பிராந்தியங்களில் இந்தச் சேவையை அறிமுகப்படுத்தி வருகிறது. ஏர்டெல் தனது 5ஜி சேவைகளை 2022 இல் ஏற்கனவே உள்ள 4ஜி நெட்வொர்க்கின் (NSA) அடிப்படையில் தொடங்கினாலும், தற்போது 4ஜி தொழில்நுட்பத்தை நம்பியிருக்காத புதிய SA வகை 5ஜி நெட்வொர்க்கை விரிவுபடுத்துகிறது. போட்டி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே நாடு முழுவதும் புதிய SA 5ஜி சேவையை மட்டுமே வழங்குகிறது. இதற்கிடையில், ஏர்டெல் தனது ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அடுத்த மாதம் உயர்த்தக்கூடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. வோடஃபோன்-ஐடியா நிறுவனமும் விலையை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. எனினும், விலை உயர்வு குறித்து இதுவரை எந்த நிறுவனமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.