இலவச 5G சேவை வணிகப் பயன்பாட்டிற்கு அல்ல.. எச்சரித்த ஏர்டெல்!
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் 5G சேவையை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது ஏர்டெல் நிறுவனம். அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் இந்தியாவின் 3,000 நகரங்களில் 5G சேவையை விரிவுபடுத்தியிருப்பதாக அறிவித்தது ஏர்டெல். அறிமுக சலுகையாக குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டங்களில் மட்டும் கூடுதல் வசதியாக அன்லிமிடெட் 5G சேவையை வழங்கி வருகிறது ஏர்டெல். ரூ.239-க்கு மேலான ரீசார்ஜ் திட்டங்களில் கூடுதல் வசதியாக 5G சேவை வழங்கப்படுகிறது. இதனை ஏர்டெல் தேங்க்ஸ் செயலி மூலம் வாடிக்கையாளர்கள் உறுதி செய்து கொள்ளலாம். ஏர்டெல் நிறுவனம் 5G சேவை வழங்கிய நகரங்களில், 5G சேவையை பயன்படுத்தும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் பயனர்கள் செட்டிங்கில் 5G வசதியை தேர்ந்தெடுத்து இலவச 5G சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வணிகப் பயன்பாட்டிற்குத் தடை:
இந்நிலையில் தற்போது அளிக்கப்பட்டிருக்கும் 5G சேவையானது தனிநபர் பயன்பாட்டிற்கு மட்டுமே, வணிகப் பயன்பாட்டிற்கு அல்ல எனத் தெளிவாக அதன் இணையப்பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது ஏர்டெல் நிறுவனம். மேலும், இலவச 5G சேவையை ஹாட்ஸ்பாட் மூலம் பயன்படுத்த அனுமதியில்லை எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்களுடைய இலவச 5G சேவையை வணிகப் பயன்பாடுகளுக்காகப் பயன்படுத்துவது தெரிய வந்தால், தங்களுடைய சேவையை நிறுத்தியோ அல்லது நீக்கியோ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்நிறுவனம் இணையப்பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது. வரும் 2023 செப்டம்பரில் பெரும்பாலான நகரம் மற்றும் கிராமப்பகுதிகளிலும், மார்ச் 2024-ல் இந்தியா முழுவதும் தங்களுடைய 5G சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கிறது ஏர்டெல் நிறுவனம்.