LOADING...
தம்பதியின் 19 ஆண்டு குழந்தை ஏக்கத்தைப் போக்கிய செயற்கை நுண்ணறிவு; புதிய தொழில்நுட்பம் அறிமுகம்
தம்பதியின் 19 ஆண்டு குழந்தை ஏக்கத்தைப் போக்கிய செயற்கை நுண்ணறிவு

தம்பதியின் 19 ஆண்டு குழந்தை ஏக்கத்தைப் போக்கிய செயற்கை நுண்ணறிவு; புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 03, 2025
06:42 pm

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, விந்தணு மாதிரிகளைச் சல்லடை செய்து சாத்தியமான உயிரணுக்களைக் கண்டறிவதன் மூலம், 19 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தம்பதியினர் கருத்தரிக்க உதவியதாக தி லான்செட் இதழில் வெளியான கட்டுரை தெரிவித்துள்ளது. விந்தணுக்கள் குறைவாக அல்லது இல்லாத அசூஸ்பெர்மியா (Azoospermia) எனும் குறைபாடு கொண்ட 39 வயதுடைய ஆணின் மாதிரியில், ஏஐ மூலம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக 25 லட்சம் படங்களை ஸ்கேன் செய்த பிறகு, கருத்தரிக்கத் தகுதியான இரண்டு விந்தணுக்கள் அடையாளம் காணப்பட்டன.

கொலம்பியா

கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வு

கொலம்பியா பல்கலைக்கழக கருத்தரிப்பு மையத்தின் இயக்குனர் ஜெவ் வில்லியம்ஸ் தலைமையிலான ஆய்வுக் குழு, 'விந்தணு கண்காணிப்பு மற்றும் மீட்பு' (Sperm Tracking and Recovery - STAR) என்ற இந்த மேம்பட்ட முறையை உருவாக்கியுள்ளது. இந்த ஏஐ உதவியுடன் இயங்கும் அமைப்பு, அசூஸ்பெர்மிக் என வகைப்படுத்தப்பட்ட விந்தணு மாதிரிகளில் கூட, மிக அரிதான விந்தணுக்களை உயர் வேகத்தில், நிகழ்நேரத்தில் அடையாளம் காணும் திறன் கொண்டது. இந்தச் சோதனைக்காக, STAR அமைப்பு 2.5 மில்லியன் படங்களை சுமார் 2 மணி நேரத்தில் பகுப்பாய்வு செய்து, இரண்டு இயங்கும் விந்தணுக்கள் உட்பட ஏழு விந்தணுக்களைக் கண்டறிந்தது. கண்டறியப்பட்ட அந்த இயங்கும் விந்தணுக்கள் முதிர்ந்த இரண்டு முட்டைகளில் செலுத்தப்பட்டு, அவை கருக்களாக (Embryos) வளர்ச்சி அடைந்தன.

கர்ப்பம்

கர்ப்பம் உறுதி

இந்தச் சிகிச்சை அளிக்கப்பட்ட 37 வயதுடையப் பெண்ணுக்கு, 13 நாட்களுக்குப் பிறகு பரிசோதனையில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது. பெரும்பாலான ஆண்மைக் குறைபாடுகளுக்குச் செய்யப்படும் அறுவைச் சிகிச்சைகள் தோல்வியடையலாம் அல்லது பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம் என்ற சூழலில், இந்தச் STAR முறை அசூஸ்பெர்மியா உள்ள ஆண்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். STAR முறையின் செயல்திறனை விரிவான அளவில் மதிப்பீடு செய்வதற்கான பெரிய மருத்துவச் சோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.