
ஏஐக்கு ஏற்றவாறு மாறாத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அக்சென்ச்சர் திட்டம்
செய்தி முன்னோட்டம்
முன்னணி தகவல் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனமான அக்சென்ச்சர், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திறன்களை வலுப்படுத்தும் நோக்கில், தனது உலகளாவிய பணியாளர் குழுவை மறுசீரமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளது. ஏஐயின் வளர்ந்து வரும் தேவையைத் தக்கவைத்துக் கொள்ளும் விதமாக, ஏஐக்கு ஏற்றவாறு தங்கள் திறன்களை மாற்றியமைக்கத் தவறும் ஊழியர்கள் பணி நீக்கத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. ஏஐ அடிப்படையிலான தீர்வுகளுக்கான வாடிக்கையாளர்களின் தேவை அதிகரித்து வருவதால், அக்சென்ச்சரின் வருவாய் 2024 ஐ விட 7% உயர்ந்து, 69.7 பில்லியன் டாலராக உள்ளது. இந்த வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில், நிறுவனம் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான வணிக மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
ஊழியர் மேம்பாடு
ஊழியர் மேம்பாட்டில் முதலீடு
இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் சேமிப்பை, கண்டுபிடிப்புகள் மற்றும் ஊழியர் மேம்பாட்டில் மீண்டும் முதலீடு செய்ய உள்ளதாக நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஆஞ்சி பார்க் உறுதிப்படுத்தியுள்ளார். நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜூலி ஸ்வீட், ஏஐ மற்றும் திறன் மேம்பாடு ஆகியவை இப்போது தாங்கள் செய்யும் எல்லாவற்றின் மையமாக இருப்பதாக வலியுறுத்தினார். "எங்களிடம் திறன் மேம்பாட்டிற்கான சாத்தியமான பாதை இல்லாதபோது, தேவையான திறன்களைப் பெற ஏதுவாக, அந்த ஊழியர்களை வெளியேற்றுகிறோம்" என்று அவர் கூறினார். ஏற்கனவே 5,50,000 ஊழியர்களுக்கு ஜெனரேட்டிவ் ஏஐ அடிப்படைகளில் நிறுவனம் பயிற்சி அளித்துள்ளது. தற்போது, அக்சென்ச்சரில் 77,000 ஏஐ மற்றும் தரவு நிபுணர்கள் உள்ளனர், இது 2023 ஐ விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.