ஹோட்டல் ஸ்டைலில் உதிர் உதிரான பாசுமதி சாதம் செய்ய இதோ 'சீக்ரெட்' டிப்ஸ்!
செய்தி முன்னோட்டம்
பாசுமதி சாதம் சமைப்பது எளிது என்று தோன்றினாலும், சிறு கவனக்குறைவு கூட அந்த சாதத்தின் நறுமணத்தையும் நீளமான வடிவத்தையும் கெடுத்துவிடும். நீங்கள் சமைக்கும் பாசுமதி சாதம் ஏன் குழைந்து போகிறது? அரிசி ஊறவைக்கும் நேரம், தண்ணீர் அளவு, சமைக்கும் முறை என ஒவ்வொரு இடத்திலும் நீங்கள் பக்குவமாக கையாண்டால் ஹோட்டலில் இருப்பது போல நீளமான பாஸ்மதி அரிசி சமைக்கலாம். இதோ அதற்கான காரணங்களும் தீர்வுகளும்:
#1
நீங்கள் செய்யும் தவறுகள்
ஊறவைக்காமல் சமைப்பது: அரிசியைக் கழுவியவுடன் நேரடியாக சமைப்பது தவறு. இதனால் அரிசியின் வெளிப்பகுதி வெந்து, உட்பகுதி வேகாது. அரிசியை 20-30 நிமிடங்கள் ஊறவைப்பது அவசியம். அதிக தண்ணீர்: பாசுமதி அரிசியைப் பாஸ்தா போல அதிகத் தண்ணீரில் வேகவைக்கக் கூடாது. சரியான அளவு தண்ணீர் மட்டுமே சேர்க்க வேண்டும். அடிக்கடி கிளறுவது: சாதம் வெந்துகொண்டிருக்கும்போது அடிக்கடி கிளறினால், அரிசி உடைந்து ஸ்டார்ச் (Starch) வெளியேறி, சாதம் ஒட்ட ஆரம்பித்துவிடும். அதிக வெப்பம்: ஆரம்பம் முதல் இறுதி வரை அதிகத் தீயில் சமைத்தால், தண்ணீர் சீக்கிரம் வற்றி அரிசி சரியாக வேகாது. சமைக்கும்போது மூடியைத் அடிக்கடி திறந்து பார்க்க வேண்டாம். நீராவி வெளியேறினால் சாதம் சரியாக வேகாது.
செய்முறை
பக்குவமான பாசுமதி சாதம் சமைப்பதற்கான டிப்ஸ்
பாசுமதி அரிசி - 1 கப் (200 கிராம்) தண்ணீர் - 1.5 கப் (375 மி.லி) உப்பு மற்றும் நெய்/எண்ணெய் - அரை தேக்கரண்டி. செய்முறை: அரிசியை தண்ணீரில் 3-4 முறை சுத்தமாக கழுவி சுத்தமான தண்ணீரில் 20 முதல் 30 நிமிடங்கள் ஊறவைத்து, நீரை வடிகட்டவும். ஒரு பாத்திரத்தில் அரிசி, தண்ணீர், உப்பு மற்றும் நெய் சேர்த்து மிதமான தீயில் வைக்கவும். தண்ணீர் வற்றியதும், அடுப்பை மிக குறைந்த தீயில் வைத்து மூடி 10 நிமிடங்கள் வேகவிடவும். அடுப்பை அணைத்த பிறகு, மூடியைத் திறக்காமல் 5 நிமிடங்கள் அப்படியே விடவும். இது சாதம் உதிர் உதிராக மாற உதவும்.