LOADING...
மழைக்காலத்தில் எலக்ட்ரானிக் பொருட்களை நனையாமல் எப்படி பாதுகாக்கலாம்?
மழைக்காலத்தில் எலக்ட்ரானிக் பொருட்களை பாதுகாக்கும் வழிகள்

மழைக்காலத்தில் எலக்ட்ரானிக் பொருட்களை நனையாமல் எப்படி பாதுகாக்கலாம்?

எழுதியவர் Vasuki
Jul 12, 2026
03:25 pm

செய்தி முன்னோட்டம்

மழைக்காலத்தில் பெய்யும் மழையினாலும் காற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதத்தினாலும் மின்னணு சாதனங்களுக்குப் பாதிப்புகள் ஏற்படக்கூடும். சில நேரங்களில் எதிர்பாராமல் மழைநீர் பட்டு, நமது மொபைல் போன் அல்லது லேப்டாப் போன்ற சாதனங்கள் நனைந்து முற்றிலும் பழுதாகிவிடும் அபாயமும் உள்ளது. அதுமட்டுமன்றி, தொடர் மழையினால் ஏற்படும் மின்தடங்கல் மற்றும் ஈரப்பதம் ஆகியவை டி.வி, பிரிட்ஜ் போன்ற பெரிய வீட்டு உபயோகச் சாதனங்களுக்கும் பாதிப்பை விளைவிக்கலாம். எனவே, இந்த மழைக்காலத்தில் உங்களுடைய எலக்ட்ரானிக் பொருட்களைப் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் வைத்துக்கொள்வதற்கான சில முக்கியமான வழிகளை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

#1

எலக்ட்ரானிக் பொருட்களை மூடி வைக்கவும்

மழைக்காலத்தில் உங்களுடைய மின்னணு சாதனங்களை எப்பொழுதுமே சரியாக மூடி வைத்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு, உங்களது மொபைல் போனை பாக்கெட்டில் வைப்பதற்கு முன்பு, அதில் மழைநீர் படாதவாறு ஒரு நல்ல வாட்டர்ப்ரூப் கவர் போட்டுக்கொள்ள வேண்டும். அதேபோல, வீட்டில் இருக்கும் டி.வி, பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் போன்ற பெரிய சாதனங்களுக்கும் பயன்பாட்டில் இல்லாத நேரங்களில் பாதுகாப்பு கவர்களைப் போட்டு மூடி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், காற்றில் உள்ள ஈரப்பதமோ அல்லது எதிர்பாராமல் படும் மழைநீரோ சாதனங்களின் உள்ளே செல்லாமல், பொருட்கள் நீண்ட நாட்களுக்குப் பத்திரமாக இருக்கும்.

#2

வயர் மற்றும் ப்ளக்குகளை உலர்ந்த நிலையில் வைக்கவும்

மழைக்காலத்தில் மின்சார வயர்கள் மற்றும் பிளக்குகளுக்கும் கூட எளிதில் பாதிப்பு அல்லது மின்கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றை எப்போதுமே முற்றிலும் உலர்ந்த நிலையில் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். ஒருவேளை எதிர்பாராத விதமாக மழைநீர் பட்டு, வயர் அல்லது பிளக்குகளுக்குள் தண்ணீர் சென்றிருந்தால், அவற்றை உடனே மின் இணைப்பில் இணைத்துப் பயன்படுத்தக் கூடாது. ஈரப்பதம் இருக்கும்போது பயன்படுத்தினால், சாதனங்கள் பெரிய அளவில் பழுதடைவதுடன் மின்சார அதிர்ச்சி அல்லது ஷார்ட் சர்க்யூட் போன்ற ஆபத்துகளும் ஏற்படக்கூடும். சுவிட்ச் போர்டு அல்லது பிளக் பாயிண்டுகளில் எங்காவது மழைநீர் கசிந்து தேங்கி இருந்தால், முதலில் மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு நன்றாகக் காய வைக்க வேண்டும். அது முற்றிலும் உலர்ந்ததை உறுதி செய்த பிறகே, மின்னணு சாதனங்களை இயக்க வேண்டும்.

Advertisement

#3

சாதனங்களை தரையில் படாமல் உயரமான இடத்தில் வைக்கவும்

மழைக்காலத்தில் உங்களுடைய மின்னணு சாதனங்களைத் தரைமட்டத்தில் வைக்காமல், சற்று உயரமான இடங்களில் வைப்பது அவசியமாகும். திடீரென மழைநீர் வீட்டிற்குள் புகுந்தாலோ அல்லது தரையில் நீர் கசிந்து தேங்கினாலோ சாதனங்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடும். இதற்காக, கணினி, யு.பி.எஸ், சவுண்ட் சிஸ்டம் போன்ற சாதனங்களை மேஜை மீதோ வைக்கலாம். ஒருவேளை, பிரிட்ஜ் அல்லது வாஷிங் மெஷின் போன்ற பெரிய சாதனங்களைத் தரையில்தான் வைக்க வேண்டும் என்ற நிலை இருந்தால், அவற்றிற்கு அடியில் பிளாஸ்டிக் தாள்களை விரித்தோ அல்லது உயரமான ரப்பர் ஸ்டாண்டுகளைப் பொருத்தியோ வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், தரைவழியாக வரும் ஈரப்பதத்திற்கும் சாதனங்களுக்கும் நேரடித் தொடர்பு இருக்காது என்பதால், ஷார்ட் சர்க்யூட் போன்ற மின்கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

Advertisement

#4

நீர் புகாத கவர்களைப் பயன்படுத்தவும்

தற்போதைய சந்தையில் தண்ணீர் உள்ளே புகாத பல்வேறு வகையான வாட்டர்ப்ரூப் கவர்கள் பரவலாகக் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தி உங்களது மின்னணு சாதனங்களை மழைநீரிலிருந்து மிக எளிதாகப் பாதுகாக்கலாம். இந்த வாட்டர்ப்ரூப் கவர்கள் குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களுக்காகவே பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகின்றன. இவற்றைத் தொடுதிரை வசதியுடன் பயன்படுத்துவதன் மூலம், பலத்த மழை பெய்யும் போது கூட உங்களது சாதனங்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். அதேபோல, நீங்கள் வெளியில் செல்லும்போது உங்களது லேப்டாப்பைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல, தண்ணீர் புகாத லேப்டாப் பேக்குகளையோ அல்லது லேப்டாப்பிற்கான பிரத்யேக சிலிகான் கவர்களையோ பயன்படுத்தலாம். இது சாதனங்கள் மழையில் நனைந்து பழுதாவதுடன், உங்களது முக்கியத் தரவுகள் அழிந்துபோவதையும் தடுக்கிறது.

#5

மழைக்காலத்தில் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்

இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் போது உங்களுடைய மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில், இந்தச் சமயத்தில் சாதனங்களைப் பயன்படுத்தினால் அவை பழுதடைவது மட்டுமன்றி, மின்கசிவு காரணமாக உங்களுக்கே ஆபத்தாகவும் முடியலாம். குறிப்பாக, உங்களது மொபைல் போன் அல்லது லேப்டாப் போன்ற சாதனங்கள் ஒருவேளை மழைநீரில் நனைந்துவிட்டால், அவற்றை உடனடியாக ஆன் செய்யவோ அல்லது சார்ஜரில் இணைத்துப் பயன்படுத்தவோ முயலக் கூடாது. நனைந்த சாதனங்கள் முற்றிலும் உலரும் வரை அவற்றை ஆன் செய்யாமல் வைத்திருப்பதுதான் பாதுகாப்பானது. தேவையெனில், சர்வீஸ் சென்டருக்குக் கொண்டு சென்று சரிபார்ப்பது நல்லது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள எளிய வழிகளைப் பின்பற்றி, இந்த மழைக்காலத்திலும் உங்களுடைய விலைமதிப்பற்ற மின்னணு சாதனங்களைப் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் பராமரித்துக் கொள்ளுங்கள்.

Advertisement