LOADING...
குளிர்பானங்களை அதிகமாகக் குடிப்பது எடையை அதிகரிக்குமா? தெரிந்துகொள்ள வேண்டிய 5 காரணங்கள்!
குளிர்பானங்களை குடிப்பதால் உடல் எடை அதிகரிக்குமா என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

குளிர்பானங்களை அதிகமாகக் குடிப்பது எடையை அதிகரிக்குமா? தெரிந்துகொள்ள வேண்டிய 5 காரணங்கள்!

எழுதியவர் Vasuki
May 19, 2026
08:43 pm

செய்தி முன்னோட்டம்

வெயில் காலத்தில் குளிர்பானம் குடிப்பது தற்காலிகமாகக் குளிர்ச்சியைக் கொடுத்தாலும், அன்றாடம் குளிர்பானங்களைக் குடிப்பது உடலுக்குப் பல வழிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, அவற்றில் அதிக அளவில் சர்க்கரை சேர்க்கப்பட்டிருந்தால் உடல்நலக் கேடு இன்னும் அதிகமாகும். குளிர்பானங்களை அதிகமாக உட்கொள்வது எவ்வாறு உடல் எடையை வேகமாக அதிகரிக்கும் என்பதைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 5 முக்கியக் காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

#1

கலோரிகள் அதிகரிக்கக்கூடும்

குளிர்பானங்களில் கலோரிகளின் அளவு மிக அதிகமாக இருக்கும். இதனால், இவற்றைத் தொடர்ந்து அதிகமாகக் குடித்து வரும்போது உடல் எடை வேகமாக அதிகரிக்கக்கூடும். உதாரணமாக, ஒரு சாதாரண சோடா டப்பாவில் கிட்டத்தட்ட 150 கலோரிகள் வரை உள்ளன. இதே குளிர்பானத்தை நீங்கள் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை குடித்தால், உடலில் சேரும் கலோரிகளின் அளவு மிக அதிகமாகிவிடும். இந்தத் தொடர் பழக்கம் நாளடைவில் உடல் பருமனுக்கு வழிவகுக்கும். எனவே, இதுபோன்ற பானங்களை முற்றிலும் தவிர்ப்பது அல்லது மிகவும் அளவோடு குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

#2

குளிர் பானங்கள் பசியை தூண்டலாம்

குளிர்பானங்களில் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருப்பதால், அவை பசியைத் தூண்டும் காரணியாக மாறுகின்றன. குளிர்பானத்தைக் குடிக்கும்போது தற்காலிகமாக வயிறு நிறைந்தது போன்ற ஒரு போலி உணர்வு ஏற்பட்டாலும், அது உடனே மறைந்துவிடும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென உயர்ந்து, பின்னர் வேகமாக வீழ்ச்சியடைவதால், மூளைக்கு மீண்டும் பசி எடுப்பது போன்ற சிக்னல் அனுப்பப்படுகிறது. இதன் காரணமாக, வழக்கத்தை விடவும் அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றி செரிமானச் செயல்பாடுகளும் பாதிக்கப்படலாம். இந்தத் தேவையற்ற அதிகப்படியான உணவு உட்கொள்ளல், இறுதியில் உடல் எடை அதிகரிப்பதற்கே வழிவகுக்கும்.

Advertisement

#3

உடல் மந்தமாகலாம்

நீங்கள் தினமும் குளிர்பானங்களைக் குடித்து வந்தால், உங்களது உடலின் ஒட்டுமொத்த ஆற்றல் (சக்தி) அளவுகள் பாதிக்கப்படும். குளிர்பானத்தைக் குடித்த உடனே தற்காலிகமாக ஒரு புத்துணர்ச்சி கிடைப்பது போலத் தோன்றினாலும், சர்க்கரையின் அளவு சட்டெனக் குறையும்போது உடல் மிகவும் மந்தமாகிவிடும். இதனால் அன்றாட வேலைகளைச் செய்வதற்கான சுறுசுறுப்பு குறைந்து, உடற்பயிற்சி போன்ற உடல் உழைப்பிற்கான ஆற்றலும் குறையும். இந்த மந்தநிலை காரணமாக உடலின் வளர்சிதை மாற்றமும் (Metabolism), செரிமான வேகமும் மந்தமடைகின்றன. செரிமானம் சீராக இல்லாதபோது உடலில் கொழுப்புகள் எளிதாகத் தேங்கி, உடல் எடை வேகமாக அதிகரிக்கத் தொடங்கும்.

Advertisement

#4

ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம்

வணிக ரீதியிலான குளிர்பானங்களில் உடலுக்கு நன்மை பயக்கும் எந்தவொரு ஊட்டச்சத்துக்களும் இருப்பதில்லை. இவற்றைத் தொடர்ந்து குடிப்பதன் மூலம் உடலுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் வைட்டமின்களும், தாதுக்களும் (மினரல்ஸ்) கிடைக்காமல் போய்விடுகின்றன. இதனால் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, ஒட்டுமொத்த நோய் எதிர்ப்புச் சக்தியும் குறைவதோடு பலவிதமான ஆரோக்கியப் பிரச்சினைகளும் வரக்கூடும். மேலும், இந்த பானங்களில் உள்ள செயற்கை வேதிப்பொருட்கள் செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாட்டைப் பாதித்து, வளர்சிதை மாற்றத்தைக் குறைப்பதால் உடல் எடை அதிகரிப்பதற்கும் காரணியாக அமைகின்றன. எனவே, வெற்றுப் கலோரிகளைக் கொண்ட இத்தகைய குளிர்பானங்களைத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாக இளநீர், புதிய பழச்சாறுகள் மற்றும் மோர் போன்ற இயற்கையான பானங்களை அருந்துவது உடலுக்கு உகந்தது.

#5

உறக்கத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தலாம்

பல குளிர்பானங்களில் காஃபின் (Caffeine) மற்றும் செயற்கை இனிப்புகள் அதிக அளவில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவை மூளையைத் தூண்டி விழிப்புடன் வைத்திருக்கக்கூடியவை. எனவே, நீங்கள் இரவு தூங்கச் செல்வதற்கு முன்னால் குளிர்பானங்களைக் குடித்தால், அது உங்களது ஆழ்ந்த உறக்கத்தைப் பெரிதும் பாதிக்கும். முறையான தூக்கமின்மை உடலில் ஹார்மோன் சமநிலையைக் குலைத்து, பசியைக் கட்டுப்படுத்தும் 'லெப்டின்', 'க்ரெலின்' போன்ற ஹார்மோன்களின் செயல்பாட்டை மாற்றியமைக்கும். இதனால், இரவு நேரங்களில் தேவையற்ற பசி ஏற்பட்டு உடல் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாகின்றன. எனவே, இரவு தூங்குவதற்கு முன்பாகக் குளிர்பானங்கள் குடிப்பதைத் முற்றிலும் தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.

Advertisement