Loading...
மீண்டும் மீண்டும் வருதா? மூல நோயை நிரந்தரமாகக் குணப்படுத்துவது எப்படி? மருத்துவர்கள் கூறும் எளிய வழிகள்
மூல நோயை நிரந்தரமாகக் குணப்படுத்துவதற்கு மருத்துவர் கூறும் எளிய வழிகள்

மீண்டும் மீண்டும் வருதா? மூல நோயை நிரந்தரமாகக் குணப்படுத்துவது எப்படி? மருத்துவர்கள் கூறும் எளிய வழிகள்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 30, 2026
02:09 pm

செய்தி முன்னோட்டம்

மலக்குடலின் கீழ் பகுதியில் அல்லது ஆசனவாயை சுற்றியுள்ள ரத்த நாளங்கள் வீங்குவதால் மூல நோய் ஏற்படுகிறது. இது ஆசனவாயின் உள்பகுதியில் தோன்றும் உள் மூலம் மற்றும் வெளிப்புற தோலின் கீழ் தோன்றும் வெளி மூலம் என இருவகைப்படும். மலக்குடலில் இருந்து ரத்தப்போக்கு ஏற்படுதல், அரிப்பு, வீக்கம், மற்றும் மலம் கழிக்கும் போது ஏற்படும் கடுமையான வலி ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். நாள்பட்ட மலச்சிக்கல் மற்றும் மலம் கழிக்கும் போது அதிக அழுத்தம் கொடுப்பதே இதற்கு முதன்மைக் காரணமாகும்.

குணமாகுமா?

மூல நோய் தானாகவே குணமாகுமா?

ஆரம்பக்கட்ட மூல நோய் பாதிப்புகள் தகுந்த உணவுமுறை மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் மூலம் தானாகவே சரியாக வாய்ப்புள்ளது.

உணவில் காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்கள் போன்ற நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்வது மலத்தை இளகச் செய்து வலியைக் குறைக்கும்.

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, தொடர்ச்சியாக ஒரே இடத்தில் உட்காருவதைத் தவிர்ப்பது மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது மூல நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தப் பெரிதும் உதவும்.

இருப்பினும் தொடர்ந்து ரத்தப்போக்கு இருந்தால் மருத்துவரை அணுகுவது மிக அவசியமாகும்.

நிரந்தரமாக குணமாகுமா?

மூல நோயை நிரந்தரமாகக் குணப்படுத்த முடியுமா?

தகுந்த சிகிச்சைகள் மூலம் தற்போதுள்ள மூல நோயைக் முழுமையாகக் குணப்படுத்த முடியும்.

ஆனால் நோயை உருவாக்கிய மூலக்காரணங்களான மலச்சிக்கல் மற்றும் தவறான உணவுப் பழக்கங்களை மாற்றாவிட்டால் மூல நோய் மீண்டும் வர வாய்ப்புள்ளது.

எனவே தகுந்த மருத்துவ சிகிச்சையோடு சேர்த்து ஆரோக்கியமான குடல் இயக்கத்தைப் பராமரிப்பதே மூல நோயை நிரந்தரமாகக் கட்டுப்படுத்த ஒரே வழியாகும்.

தீவிரமான பாதிப்பு உள்ளவர்களுக்கு நவீன அறுவை சிகிச்சை மற்றும் சர்ஜிகல் லேசர் முறைகள் மூலம் நிரந்தர தீர்வை பெற முடியும்.

ADVERTISEMENT

ரத்தப்போக்கு

ஆசனவாய் ரத்தப்போக்கை அலட்சியப்படுத்தாதீர்கள்

ஆசனவாயில் இருந்து ரத்தப்போக்கு ஏற்படும் போதெல்லாம் அது மூல நோயால் தான் ஏற்படுகிறது என தவறாகக் கருதக் கூடாது.

தொடர்ச்சியான ரத்தப்போக்கு, திடீர் உடல் எடை குறைதல் மற்றும் மலம் கழிக்கும் பழக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை வேறு சில தீவிரமான குடல் நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

எனவே சுய மருத்துவம் செய்து கொள்ளாமல், முறையான மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை உறுதி செய்து சரியான சிகிச்சையைப் பெறுவதே பாதுகாப்பானது.

ADVERTISEMENT