Airbnb ரூம்களில் இனி 'செக்-அவுட்' வேலைகள் இல்லை: புதிய விதிகள் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
குறுகிய கால வீட்டு வாடகைத் தளமான ஏர்பிஎன்பி, தங்களின் தங்குமிடங்களை காலி செய்து செக்-அவுட் செய்யும்போது சுற்றுலா பயணிகள் செய்ய வேண்டிய வேலைகளுக்கு கட்டுப்பாடு விதித்து புதிய உலகளாவிய கொள்கை விதிகளை அறிவித்துள்ளது. வருகிற நவம்பர் 20 முதல் முன்பதிவு செய்யப்படும் அனைத்து ஏர்பிஎன்பி தங்குமிடங்களுக்கும் இந்தப் புதிய விதிகள் பொருந்தும். செக்-அவுட் செய்யும்போது படுக்கை விரிப்புகளை அகற்றுவது, பாத்திரங்களைக் கழுவுவது, குப்பைகளை வெளியே எடுத்துச் சென்று கொட்டுவது போன்ற அதிக நேரமும் சிரமமும் எடுக்கும் பணிகளை இனி விருந்தினர்களிடம் உரிமையாளர்கள் கட்டாயப்படுத்த முடியாது. ஏற்கனவே 'சுத்தம் செய்யும் கட்டணம்' செலுத்திய பின்னரும், விருந்தினர்களை வீட்டைச் சுத்தம் செய்ய வற்புறுத்துவது குறித்து பயணிகள் தெரிவித்த புகார்களைத் தொடர்ந்து இந்த முடிவை ஏர்பிஎன்பி எடுத்துள்ளது.
கோரிக்கை
நியாயமான கோரிக்கைகளுக்கு அனுமதி
அதேவேளையில், பயன்பாட்டுக்கு பின் பயன்படுத்திய பாத்திரங்களை சிங்க்கில் போட்டு வைப்பது, பயன்படுத்திய துண்டுகளை ஒரு இடத்தில் சேகரித்து வைப்பது, கழிவுகளைப் பிரித்து வைப்பது போன்ற எளிய மற்றும் நியாயமான கோரிக்கைகளை வீட்டின் உரிமையாளர்கள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கரடிகள் நடமாட்டம் உள்ள பகுதிகள் போன்ற சில சிறப்பு இடங்களில், மிருகங்களிடமிருந்து பாதுகாக்கும் தொட்டிகளில் குப்பைகளை போடக் கோருவது போன்ற விதிவிலக்குகள் அனுமதிக்கப்படும்.
தடை
வெளிப்படைத்தன்மை மற்றும் அபராதங்களுக்குத் தடை
வீட்டின் உரிமையாளர்கள் தங்களது அனைத்து 'வீட்டு விதிகளையும்' முன்பதிவு செய்யும் தளத்திலேயே தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
முன்பதிவு முடிந்ததும் தனிப்பட்ட குறுஞ்செய்திகள் மூலமாகவோ அல்லது வீட்டின் உள்ளே போர்டு அமைத்தோ புதிய விதிகளைத் திணிக்கக் கூடாது.
செக்-அவுட் பணிகளை செய்யாத விருந்தினர்களுக்கு வீட்டின் உரிமையாளர்கள் இனி தன்னிச்சையாக அபராதம் விதிக்க முடியாது.
சேதங்கள் ஏதேனும் ஏற்பட்டால் ஏர்பிஎன்பி காப்பீடு மற்றும் இழப்பீட்டு முறைகள் மூலமாகவே தீர்வு காண வேண்டும்.
சுற்றுலா செல்லும் பயணிகள் ஏர்பிஎன்பி தங்குமிடங்களில் அதிக சிரமமின்றி ஓய்வெடுக்கவும், வெளிப்படையான அனுபவத்தைப் பெறவும் இந்த மாற்றம் பெரும் உதவியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.