
திருமணத்துக்கு வற்புறுத்தல்: காதலியை உயிரோடு தீ வைத்து கொளுத்திய காதலன்
செய்தி முன்னோட்டம்
திருப்பூர், பல்லடத்தை அடுத்த ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய பூஜா, பெற்றோர் இறந்து விட்டதால் மாமா வீட்டில் தங்கி அருகில் உள்ள பனியன் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் (22) என்பவரோடு பூஜாவிற்கு கடந்த ஓராண்டாக காதல் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக லோகேஸ்வரன் பூஜாவை தவிர்த்து வந்ததால், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு லோகேஸ்வரனை பூஜா வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பல்லடம் பெத்தாம்பாளையம் சாலை, பனப்பாளையம் பகுதியில் உள்ள காட்டு பகுதிக்கு லோகேஸ்வரன் பூஜாவை கொலை செய்ய திட்டமிட்டு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு, பூஜாவை தலையில் அடித்த லோகேஸ்வரன், அவர் மயங்கிய பின்னர் அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளான்.
காதலனை விசாரித்து வரும் பல்லடம் போலீஸ்
'காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்' என்று கதறி ஓடி வந்த இளம்பெண்-சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
தீ பற்றிய நிலையில் 'காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்' என்று பூஜா தட்டம்பாளையம் சாலையில் ஓடி வந்துள்ளார்.
அவரை பார்த்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் அளித்துள்ளார்கள்.
மேலும் பூஜாவை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பூஜாவை போலீசார் விசாரித்த போது, மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அங்கு முதலுதவி செய்யப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பூஜா கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த பூஜா இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் அங்கிருந்து பைக்கில் தப்ப முயன்ற லோகேஸ்வரன் கீழே விழுந்து காயமானதால் அவனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதையடுத்து, பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.