வேங்கைவயல் விவகாரம் - மேலும் 10 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த உத்தரவு
தமிழ்நாடு மாநிலம், புதுக்கோட்டையில் உள்ள வேங்கை வயல் கிராமத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில், இந்த வழக்கினை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதுவரை 147 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. மேலும் குடிநீர் பகுப்பாய்வு, டி.என்.ஏ. பரிசோதனை மூலம் குற்றவாளிகளை பிடிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. டி.என்.ஏ. பரிசோதனை மூலம் குற்றவாளிகளை பிடிக்க 139 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை எடுக்க வேண்டும் என்று எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதன் முதல்கட்டமாக 11 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.
டி.என்.ஏ. பரிசோதனை நாளை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நடத்தப்படும்
ஆனால் அந்த 11 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் வெறும் 3 பேர் மட்டுமே பரிசோதனைக்கு ஆஜராகினர். மீதமுள்ள 8 பேர் ஆஜராகவில்லை என்று செய்திகள் தெரிவிக்கிறது. இதனையடுத்து தற்போது கூடுதலாக 10 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த சிபிசிஐடி போலீசார் 3 நாட்களுக்கு முன்னர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இதனை ஏற்ற நீதிமன்றமும் அதற்கு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில் நாளை(மே.,5) புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 10 பேருக்கு டி.என்.ஏ.பரிசோதனை நடத்தப்படவுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த விசாரணை ஆணையத்தலைவர் நீதிபதி சத்திய நாராயணன் இந்த விவகாரம் குறித்த விசாரணையில் விரைவில் களமிறங்குவார் என்று செய்திகள் தெரிவிக்கிறது. மேலும் இதற்காக அவர் வரும் 6ம் தேதி புதுக்கோட்டை செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.