மாநிலங்களவையில் முதல் TVK எம்.பி. யார்? விஜய் தீவிர ஆலோசனை
செய்தி முன்னோட்டம்
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம், தற்போது டெல்லி நாடாளுமன்ற அரசியலிலும் தனது முதல் தடம் பதிப்பிற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கியுள்ளது. அதிமுகவின் சி.வி.சண்முகம் ராஜினாமா செய்ததால் காலியாகும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்குத் தவெக சார்பில் யாரை நிறுத்துவது என்பது குறித்து முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு விரைவில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் தவெக சார்பில் யாரைக் களமிறக்குவது என்பது குறித்தும் அக்கட்சித் தலைமை ஆலோசித்து வருகிறது.
தேர்தல் வெற்றி
திருச்சி கிழக்கு இடைதேர்தல்
சமீபத்தில் நடைபெற்று முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாகக் களம் கண்ட தமிழக வெற்றிக் கழகம், 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து வரலாற்றுச் சாதனை படைத்தது. சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு முதலமைச்சர் விஜய் வெற்றி பெற்றிருந்தார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி ஒரு பதவியைத் தக்கவைக்க வேண்டும் என்பதால், அவர் தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை முறைப்படி ராஜினாமா செய்துள்ளார். இதன் காரணமாகத் திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு விரைவில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் (By-election) தவெக சார்பில் யாரைக் களமிறக்குவது என்பது குறித்தும் அக்கட்சித் தலைமை ஆலோசித்து வருகிறது.
சி.வி.சண்முகம் ராஜினாமா
காலியான மாநிலங்களவை இடம்
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.வி.சண்முகம் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த டெல்லி மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் தமிழ்நாட்டிலிருந்து காலியாகியுள்ள அந்த ஒரு இடத்திற்கான நாடாளுமன்ற இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
முக்கிய நிர்வாகிக்கு வாய்ப்பு
டெல்லி அரசியல் தடம்
சட்டமன்றத்தில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களைக் கொண்டுள்ளதால், காலியாகும் இந்த ஒரு மாநிலங்களவை எம்பி பதவி தவெகவுக்கு கிடைப்பது உறுதியாகியுள்ளது. இந்தத் தேர்தலில் தவெக வெற்றி பெற்றால், அக்கட்சியின் நாடாளுமன்ற முதல் பிரதிநிதியாக அவர் டெல்லிக்குச் செல்வார். கட்சியின் கொள்கைகளைப் பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கக்கூடிய மற்றும் டெல்லி அரசியல் சூழலை நன்கு அறிந்த ஒரு முக்கிய மூத்த நிர்வாகிக்கு இந்த வாய்ப்பை வழங்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.