"ஸ்டாலின் சார் கூட்டணி ஒட்டுப்போட்ட கூட்டணி!" - வேட்பாளர் அறிமுக விழாவில் விஜய் அதிரடி!
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகக் கருதப்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்துப் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், ஆளும் திமுக அரசையும் அதன் கூட்டணிக் கட்டமைப்பையும் மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். இந்தத் தேர்தல் வெறும் வாக்குப்பதிவு அல்ல, "அதிகார மமதை கொண்ட ஒரு குடும்பத்திற்கும் பாமர மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டம்" எனப் பிரகடனப்படுத்தினார். "தமிழகத்தில் இப்போது நடப்பது இருமுனைப் போட்டிதான். மக்கள் கூட்டணியான நமக்கும், ஸ்டாலின் சார் கூட்டணிக்கும் இடையேதான் நேரடிப் போட்டி. அவர்களின் கூட்டணி உடைந்த கண்ணாடியை ஒட்ட வைத்தது போன்ற ஒட்டுப்போட்ட கூட்டணி" என்று விஜய் சாடினார்.
இருமுனைப் போட்டி:
மன்னராட்சி vs மக்களாட்சி:
இவர்களை வேட்பாளர்கள் என்று சொல்லாதீர்கள்; மக்களுக்கான காப்பாளர்கள் என்று சொல்லுங்கள். இவர்கள் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர்கள். அனுபவம் என்ற பெயரில் கொள்ளையடிப்பவர்களோ, செய்தியாளர்களைத் தாக்குபவர்களோ நமது வேட்பாளர்கள் இல்லையென அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். திமுக-வில் திருட்டு வழக்கில் சிறை சென்றவர்கள், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்கள் எல்லாம் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். முட்டுக்கொடுக்கும் ஒரு தலைவருக்கு எதிராக அத்தகைய ஒருவரைத் தான் திமுக நிற்க வைத்துள்ளது என்று பெயர் குறிப்பிடாமல் விமர்சித்தார். "தவெக-விற்கு ஓட்டுப் போடுவது மன்னராட்சியை வீழ்த்தி மக்களாட்சியைக் கொண்டு வருவதற்குச் சமம். உங்கள் இதயத்தில் விஜய், இல்லந்தோறும் எம்.எல்.ஏ என்பதே நமது இலக்கு" என்று தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
மே 4 உலக சாதனை:
அரசியல் முக்கியத்துவம்:
"வரும் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவரும்போது, தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்றது ஒரு உலக சாதனைச் செய்தியாக மாற வேண்டும். தமிழகத்தின் எதிர்காலத்திற்காக எங்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள்" என்று உருக்கமாகக் கோரிக்கை விடுத்தார். தவெக-வின் 'விசில்' சின்னத்திற்கு ஓட்டுப் போடுமாறு கேட்டுக்கொண்ட விஜய், ஓட்டுகள் சிதறாமல் தவெக-விற்கு வந்து சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தான் வேறு, தனது வேட்பாளர்கள் வேறு அல்ல என்ற கருத்தை முன்வைத்ததன் மூலம், 234 தொகுதிகளிலும் தானே நேரடியாகப் போட்டியிடுவதாக ஒரு பிம்பத்தை அவர் உருவாக்கியுள்ளார். நாளை (மார்ச் 30) விஜய் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்து, பெரம்பூரில் பிரசாரத்தைத் தொடங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.