டிஎன்பிஎஸ்சி குரூப் 4 சான்றிதழ் பதிவேற்றம் செய்ய நாளை கடைசி நாள்; கூடுதல் அவகாசம் கிடையாது
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 4 தேர்வு 2025 இல், முதற்கட்டமாகத் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்களது சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி நாள் நவம்பர் 7 ஆம் தேதி எனத் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு மேல் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படமாட்டாது என்றும், குறிப்பிட்ட தேதிக்குள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யாதவர்கள் அடுத்த கட்ட பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டார்கள் என்றும் டிஎன்பிஎஸ்சி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை 12 ஆம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் அக்டோபர் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டன.
முதற்கட்ட பட்டியல்
தற்காலிக தேர்வு செய்யப்பட்டவர்களின் முதற்கட்ட பட்டியல்
இட ஒதுக்கீடு மற்றும் காலிப் பணியிடங்களின் அடிப்படையில் ஜூனியர் அசிஸ்டன்ட், டைப்பிஸ்ட் மற்றும் ஸ்டெனோ டைப்பிஸ்ட் பதவிகளுக்குத் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டவர்களின் முதல் கட்டப் பட்டியல் அக்டோபர் 29ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்கள் சான்றிதழ்களை நவம்பர் 7க்குள் https://apply.tnpscexams.in/ என்ற இணையதளம் மூலம் OTR மூலமாக மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும். மாற்றுத்திறனாளிகள், தமிழ் வழிக் கல்வி பயின்றவர்கள் மற்றும் இட ஒதுக்கீடு கோருபவர்கள் அதற்கான உரிய படிவங்களை அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு பெற்றுப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நவம்பர் 5 ஆம் தேதி நிலவரப்படி, சுமார் 90 சதவீத தேர்வர்கள் சான்றிதழ்களைச் சமர்ப்பித்துவிட்டதாகத் தெரிவித்த டிஎன்பிஎஸ்சி, மீதமுள்ள தேர்வர்கள் தாமதிக்காமல் விரைந்து பதிவேற்றம் செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளது.