
காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால்... தனியார் பள்ளிகளுக்குப் பள்ளிக் கல்வித் துறை கடும் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று தனியார் பள்ளிகளுக்குப் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மீறினால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகப் பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தின் கீழ் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குக் காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) முடிவடைந்துள்ளன. இதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு சனிக்கிழமை முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மீண்டும் அக்டோபர் 6 ஆம் தேதி திறக்கப்பட உள்ளன.
சிறப்பு வகுப்புகள்
தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்
பள்ளி விடுமுறைக் காலங்களில் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்துவது வழக்கம் என்றாலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறை இந்த அறிவிப்பைப் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ளது. விடுமுறைக் காலங்களில் மாணவர்களைக் கட்டாயப்படுத்திச் சிறப்பு வகுப்புகளுக்கு வரவழைக்கக் கூடாது என்று அனைத்துத் தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. விடுமுறை என்பது மாணவர்களின் ஓய்வுக்காகவும், புத்துணர்ச்சி பெறவும், குடும்பத்துடன் நேரம் செலவிடவும் வழங்கப்படுவதால், நீதிமன்றத் தடை அமலில் உள்ளதன் அடிப்படையில் தனியார் பள்ளிகள் இந்த விதிமுறையை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.