தமிழக பட்ஜெட்டில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு
தமிழக பட்ஜெட் 2023-24 நேற்று(மார்ச்.,20) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பல அதிரடி அறிவிப்புகள் அதில் வெளியாகியிருந்தது. அதில் ஒன்றுதான் இந்த மெட்ரோ ரயில் திட்டம். சென்னையை போன்று கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார். இதற்கான நில அளவை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கோவையில் சாலையை அகலப்படுத்தி அதில் தான் மெட்ரோ ரயில் தடங்கள் அமைக்க முடியும் என்பதாலும், அதற்கு பல கோடி மதிப்பிலான நிலங்கள் கையகப்படுத்த வேண்டும் என்னும் காரணத்தினால் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. மேம்பாலங்களால் தான் இந்த நிலை என்பதால் சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலம் அமைக்கும் பணியினை அதிகாரிகள் கிடப்பில் போட்டுள்ளார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
மதுரை மெட்ரோ அமைக்க சாத்திய கூறுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
இந்நிலையில் கோவை அவிநாசி சாலை மற்றும் சத்தி சாலைகளை உள்ளடக்கிய பகுதிகளில் 9,000 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் பாதை அமைக்க போவதாக நேற்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி அடுத்த 5 ஆண்டுகளில் கோவையின் முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகளை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் வளர்ந்து வரும் நகரங்களுள் ஒன்றான மதுரையில் ஒத்தக்கடையையும், திருமங்கலத்தையும் இணைக்கும் வகையில் 31 கி.மீ., தொலைவிற்கு மெட்ரோ அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சாத்திய கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு தமிழக அரசிடம் ஒப்படைத்த நிலையில், இந்த பணிக்காக ரூ.8,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை நகரின் மைய பகுதியில் பூமிக்கு அடியில் திருமங்கலத்தையும், ஒத்தக்கடையையும் இணைக்கும் வகையில் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.