
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் 14 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தது
செய்தி முன்னோட்டம்
முருகனின் ஆறு படைவீடுகளில் முதன்மையானதாக கருதப்படும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், இன்று (ஜூலை 14) அதிகாலை 5:30 மணிக்கு அரோகரா கோஷம் விண்ணைப்பிளக்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. 14 ஆண்டுகளுக்கு பின், கோயிலில் திருப்பணி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இந்த நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. மொத்தம் ரூ.2.37 கோடியில் மேற்கொள்ளப்பட்ட திருப்பணிகள் நிறைவடைந்ததை ஒட்டி, குடமுழுக்கு பணிகள் கடந்த ஜூலை 10-ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கின. நேற்று மாலை 7-ம் கால பூஜையுடன் மூலவர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. இன்று அதிகாலை 3:45 மணிக்கு யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, புனித நீர் அடங்கிய தங்க மற்றும் வெள்ளிக் குடங்கள் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
சிறப்பு ஏற்பாடுகள்
சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள்
கும்பாபிஷேகத்தை நேரில் காண தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றம் வந்திருந்தனர். பாதுகாப்புக்காக 3,000 போலீசார் பணியில் ஈடுபட்டனர். 10 ட்ரோன்கள் மூலமாக புனித நீர் தெளிக்கப்பட்டது. 26 இடங்களில் LED திரைகள் மூலம் நேரலை ஏற்பாடு செய்யப்பட்டது. 4 லட்சம் பக்தர்களுக்கு உணவு வழங்கும் ஏற்பாடுகளை அமைச்சர் மூர்த்தி சார்பில் செய்யப்பட்டுள்ளது. முதலுதவி மையங்கள், நடமாடும் கழிப்பறைகள், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தை ஒட்டி மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் நேற்று திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வருகை தந்து, இன்று மாலை 6:30 மணிக்கு திரும்புவார்கள். அதனைத் தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சத்யகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாள் ஆகியோர் பங்கேற்கும் வீதியுலா நடைபெற உள்ளது.