நாளை முதல் வெயில் கொளுத்தும்! 100 டிகிரியைத் தொடும் சென்னை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகக் கடலோரப் பகுதிகளில் சுமார் 0.9 கிமீ உயரத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக வானிலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விடக் கூடுதலாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை
சென்னை மற்றும் புறநகரில் 100 டிகிரி வெயில் சதம் அடிக்கும்
தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இருப்பினும், வெயிலின் தாக்கம் குறையாமல் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 80 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியும் இருக்கக்கூடும். இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மதிய நேரங்களில் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்ப்பது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழை
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வெப்பநிலை ஒருபுறம் உயர்ந்தாலும், காற்றழுத்த தாழ்வு பாதையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (ஜூலை 12) மிதமான மழை பெய்யக்கூடும். அதனைத் தொடர்ந்து ஜூலை 13 முதல் 16-ம் தேதி வரை இதே மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால், இதர தமிழக மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்று வானிலை மையம் தெளிவுபடுத்தியுள்ளது.