செப்டம்பர் 3 வரை வெயில் சுளுக்கெடுக்கும்! மழை வருமா? சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 31) முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகக் கடலோர பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதே இந்த வெப்பநிலை மாற்றத்திற்கு முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
மிதமான மழை
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை
வெப்பநிலை அதிகரிக்கும் அதே வேளையில், மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்த மாவட்டங்களில் நாளை முதல் செப்டம்பர் 3 வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை
செப்டம்பர் 4 மற்றும் 5 ஆம் தேதிகளுக்கான மழை நிலவரம்
செப்டம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் தொடரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக மழை பெய்தாலும், பெரும்பாலான மாவட்டங்களில் பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தை விட சற்று அதிகமாகவே இருக்கும் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை அறிக்கை
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நகரின் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டையும் (37.7°C), குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட்டையும் (27.7°C) ஒட்டி இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.