தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: 107 மையங்களில் அதிநவீன பாதுகாப்பு பெட்டகம் அமைக்க அரசு உத்தரவு
செய்தி முன்னோட்டம்
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த தமிழக அரசு தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. இத்திட்டத்திற்காகத் தயாரிக்கப்படும் தங்க மோதிரங்களை பாதுகாப்பாக இருப்பு வைப்பதற்காக, மாநிலம் முழுவதும் 107 மையங்களில் அதிநவீன அம்சங்களுடன் கூடிய பாதுகாப்பு பெட்டகங்களை அமைக்குமாறு பொதுப்பணி துறைக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
பாதுகாப்பு பெட்டகம்
பாதுகாப்பு பெட்டக கட்டமைப்பு வசதிகள்
தங்க மோதிரங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மூன்று பக்கங்களிலும் கட்டிடங்களால் சூழப்பட்ட பிரத்யேகச் சேமிப்பு அறைகள் தேர்வு செய்யப்படவுள்ளன.
இதில் தரை மற்றும் சுவர்களுடன் சிமெண்ட் மற்றும் கான்கிரீட் மூலம் உறுதியாகப் பொருத்தப்பட்ட எஃகு அலமாரிகள் அமைக்கப்படும்.
இந்த அலமாரிகளின் மேற்பகுதி மற்றும் பக்கவாட்டுப் பகுதிகள் மூடப்பட்டு, முன்புறத்தில் திறக்கக்கூடிய வகையிலான மைல்ட் ஸ்டீல் கம்பி வலைக் கதவுகள் தொழில்நுட்ப வசதிகளுடன் பொருத்தப்பட உள்ளன.
ஒருங்கிணைப்பு
செப்டம்பர் 5-க்குள் பணிகளை முடிக்க அறிவுறுத்தல்
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் தேதி இத்திட்டம் முறைப்படி தொடங்கி வைக்கப்பட உள்ளது.
எனவே, தொடக்க விழாவிற்கு முன்பாகவே, அதாவது செப்டம்பர் 5-ஆம் தேதிக்குள் அனைத்து பாதுகாப்புப் பெட்டகம் அமைக்கும் பணிகளையும் முன்னுரிமை அடிப்படையில் விரைந்து முடிக்குமாறு பொதுப்பணித் துறை பொறியாளர்களுக்கு சுகாதாரத் துறைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் மற்றும் தாலுகா மருத்துவமனைகளுடன் இணைந்து பொதுப்பணித் துறை அலுவலர்கள் இப்பணியைச் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் சார்பில் ஆண்டுக்கு 4.41 லட்சம் குழந்தைகளுக்குத் தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ள நிலையில், தேர்வு செய்யப்பட்ட 107 மையங்களில் இருந்து இவை தடையின்றி விநியோகிக்கப்படும்.