LOADING...
பொதுக்கூட்டங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: SOP விதிகளை வகுக்கும் தமிழக அரசு
பொதுக்கூட்டங்களுக்கு SOP விதிகளை வகுக்கும் தமிழக அரசு

பொதுக்கூட்டங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: SOP விதிகளை வகுக்கும் தமிழக அரசு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 06, 2025
03:36 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் நடத்திய கரூர் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோகத்தை தொடர்ந்து, தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் பொதுக்கூட்டங்கள் நடத்தக் கடுமையான பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைகளை அமல்படுத்த, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் சம்பவம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவதற்கான நிலையான இயக்க நடைமுறையை 10 நாட்களுக்குள் உருவாக்கி வெளியிட, தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த SOP விதிகள் வகுக்கப்பட்டு, நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்படும் வரை, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் எந்தவிதமான பொதுக் கூட்டங்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முன்மொழியப்பட்ட வழிகாட்டுதல்கள்

தமிழக அரசு முன்மொழிந்துள்ள புதிய SOP-கள்

பொதுக் கூட்டங்களால் ஏற்படும் சேதங்கள் அல்லது விபத்துக்களுக்கு ஈடுசெய்வதற்காக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கணிசமான பாதுகாப்பு வைப்புத் தொகையை செலுத்துவது கட்டாயமாக்கப்படலாம். நிகழ்வின் அளவைப் பொறுத்து, ரூ.20 லட்சம் வரை பாதுகாப்பு வைப்புத்தொகை கட்டாயமாக்கப்படும். கூட்டத்தில் பங்கேற்கும் மக்களுக்குப் போதுமான அளவு குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதிகளை செய்து தருவது கட்டாய விதியாக்கப்படும். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஆம்புலன்ஸ்கள் செல்வதற்கான பாதைகள், அவசர கால வெளியேற்ற வழிகள் (Emergency Exits) அமைப்பது ஆகியவையும் கட்டாயமாக்கப்படும். இந்தப் புதிய விதிகளை வகுப்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகள், துறைசார் வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை கேட்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.