தமிழக காவல்துறையின் 'ஸ்பெக்ட்ரம்' திட்டம்: பாலியல் குற்றவாளிகளுக்கு கலர் கோடு
செய்தி முன்னோட்டம்
தமிழக காவல்துறை, பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை அவர்களின் குற்றத்தன்மை மற்றும் ஆபத்தின் அடிப்படையில் வகைப்படுத்தி, தீவிரமாக கண்காணிப்பதற்காக 'Spectrum' என்ற புதிய அதிநவீன திட்டத்தை தென் மண்டலத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 10 தென் மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த திட்டத்தின் கீழ், ஈவ் டீசிங் முதல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வரை பல்வேறு வழக்குகளில் சிக்கிய சுமார் 15,000 குற்றவாளிகளின் விபரங்கள் முழுமையாக மேப் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளன. Spectrum என்பதன் விரிவாக்கம்- Sexual offender Profiling, Evaluation, Classification, Tracking, Risk Assessment and Unified Monitoring System.
கண்காணிப்பு
8 நிறங்களில் 'கலர் கோடு' கண்காணிப்பு
குற்றவாளிகளின் தீவிரத்தன்மைக்கு ஏற்ப அவர்கள் பின்வரும் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுத் தனித்தனியாகக் கண்காணிக்கப்படுகிறார்கள் சிவப்பு: கூட்டுப் பாலியல் வன்கொடுமை, தொடர் பலாத்காரவாதிகள், தொடர் போக்சோ குற்றவாளிகள் ஆரஞ்சு: பெண்களைத் தொடர்ச்சியாகத் துன்புறுத்துவோர், தொடர் ஸ்டாக்கர்கள் நீலம்: சைபர் குற்றவாளிகள், ஆன்லைன் வழி ஏமாற்றுபவர்கள், சைபர் ஸ்டாக்கர்கள். ஊதா: ஒரே பாலின டேட்டிங் செயலிகளை (Grindr) தவறாக பயன்படுத்தி மக்களை ஏமாற்றுபவர்கள். கருப்பு: மனிதக் கடத்தல், விபச்சார நெட்வொர்க் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட பாலியல் குற்றக் கும்பல். வெள்ளி: சிறுவர்கள். இவர்களுக்கு, வழக்கு பதியும் முன்னர் பெற்றோர் மூலம் மனநல ஆலோசனை வழங்கி சீர்திருத்துதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கண்காணிப்பு
பயோமெட்ரிக் மற்றும் சைபர் கண்காணிப்பு
தென் மண்டலத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மெஷர்மென்ட் கேப்சரிங் யூனிட் மூலம் குற்றவாளிகளின் கைரேகைகள், கணுவிழி ஸ்கேன், உள்ளங்கை ரேகைகள், உயரம் மற்றும் உயர்தரப் புகைப்படங்கள் சேகரித்து வைக்கப்படுகின்றன. இதுகுறித்து தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிடாரி கூறுகையில், "தென் மாவட்டங்களில் ஆண்டுதோறும் 1,500 முதல் 2,000 பாலியல் வழக்குகள் பதிவாகின்றன. இதில் பெரும்பாலானவை மைனர் பெண்களுடன் பரஸ்பர சம்மதத்துடன் நடக்கும் காதல் அல்லது திருமண விவகாரங்களாகும்". "இனிமேல், இத்தகைய வழக்குகளில் சிக்கிய இளைஞர்களையும், கொடூரக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களையும் காவல்துறை ஒரே மாதிரியாக நடத்தாது. அதேபோல், முதல்முறை தவறு செய்தவர்களையும், தொடர் குற்றவாளிகளையும் தனித்தனியாகப் பிரித்து, அதிக ஆபத்தை விளைவிப்பவர்கள் மீது மட்டுமே முழு கவனமும் செலுத்தப்படும்" என்றார்.