
பூம்புகார் கடலுக்கு அடியில் பண்டைய கட்டிடங்கள் கண்டுபிடிப்பு? ஏழாவது நாளாகத் தொடரும் தொல்லியல் ஆய்வு
செய்தி முன்னோட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார் கடலுக்கு அடியில் பண்டைய தமிழர்களின் வரலாற்றை ஆராயும் தொல்லியல் துறை ஆய்வுகள் தீவிரமடைந்துள்ளன. கடல்சார் ஆய்வு ஆலோசகர் பேராசிரியர் ராஜன் தலைமையில், தமிழ்நாடு தொல்லியல் துறை அலுவலர்கள் உட்பட 20 பேர் கொண்ட நிபுணர் குழுவினர், வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) ஏழாவது நாளாக ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். சங்க இலக்கியங்கள் மற்றும் காப்பியங்களின் மூலம் ஒரு காலத்தில் மிகப்பெரிய கடல் வணிகத் துறைமுகமாக அறியப்பட்ட காவிரிப்பூம்பட்டினத்தின் (பூம்புகார்) தொன்மையை ஆராயும் விதமாக, இந்த ஆய்வு இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.
கட்டிட அமைப்புகள்
கட்டிட அமைப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்
இந்த வல்லுநர் குழுவினர் கடலின் கரையிலிருந்து சுமார் 5.5 கிலோமீட்டர் தூரத்தில், 22 மீட்டர் ஆழத்தில் ஆழ்கடல் ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். இந்த ஆய்வில், பண்டைய தமிழர்களின் நாகரிகத்தின் பழைய சுவடுகள் மற்றும் வணிக நகரம் அமைந்ததற்கான கட்டிட அமைப்புகள் கடலுக்குள் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பூம்புகார் நகரம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கடல் சீற்றங்களால் கடலுக்குள் மூழ்கியதாக நம்பப்படுகிறது. இந்த நிலையில், தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்தக் கட்டிடங்கள், பண்டைய தமிழர்களின் கடல் வணிகப் பெருமையையும், அவர்களின் மேம்பட்ட நகரத் திட்டமிடலையும் உறுதிப்படுத்தும் முக்கிய ஆதாரங்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.