இந்தியாவில் தீவிரமடையும் ஸ்வைன் ஃப்ளூ தொற்று: டெல்லியில் அதிகரிக்கும் H1N1 பாதிப்புகள்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் H1N1 எனப்படும் ஸ்வைன் ஃப்ளூ காய்ச்சல் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தேசிய அளவில் சுகாதார கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டுகளை விட எட்டு மடங்கு கூடுதல் பாதிப்புகள் பதிவாகி உள்ளதால், பொதுமக்களுக்கான எச்சரிக்கை வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. டெல்லியில் இதுவரை 2,308 ஸ்வைன் ஃப்ளூ பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய ஆண்டுகளின் சராசரியை விட சுமார் எட்டு மடங்கு அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகக் கூறிய டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் பங்கஜ் சிங், மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். மக்கள் நெரிசல் மிகுந்த இடங்களில் முகக்கவசம் அணியவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வைரஸ்களின் பரவல்
3 வகையான வைரஸ்களின் பரவல்
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு நாட்டின் வைரஸ் கண்காணிப்பு அமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக ICMR இயக்குநர் ராஜீவ் பால் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதுமுள்ள 73 ஆய்வகங்கள் மூலம் தீவிர சுவாசப் பாதிப்பு மாதிரிகள் வாரந்தோறும் பரிசோதிக்கப்படுகின்றன.
தற்போதைய தரவுகளின்படி H1N1 வைரஸ் அதிகளவில் பரவி வருவதாகவும், அதனுடன் இன்ஃப்ளூயன்ஸா B மற்றும் சில கொரோனா பாதிப்புகளும் கலந்து பரவி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவில் சுவாசப் பாதை நோய்கள் மட்டுமின்றி, வயிற்றுப்போக்கு மற்றும் அடையாளம் காணப்படாத காய்ச்சல்கள் குறித்தும் வாரந்தோறும் துல்லியமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
டெல்லி உட்பட நாடு முழுவதுமுள்ள மருத்துவமனைகளில் தேவையான சிகிச்சை பிரிவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தனிநபர் சுகாதாரத்தைப் பேணி விழிப்புணர்வுடன் இருக்குமாறு சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.