LOADING...
காலவரையறையற்ற வேலை நிறுத்தம்: தென் மாநிலங்களில் இன்று முதல் மாநிலங்களுக்கிடையே செல்லும் ஆம்னி பேருந்துகள் இயங்காது
தென் மாநிலங்களில் இன்று முதல் மாநிலங்களுக்கிடையே செல்லும் ஆம்னி பேருந்துகள் இயங்காது

காலவரையறையற்ற வேலை நிறுத்தம்: தென் மாநிலங்களில் இன்று முதல் மாநிலங்களுக்கிடையே செல்லும் ஆம்னி பேருந்துகள் இயங்காது

எழுதியவர் Sekar Chinnappan
Nov 10, 2025
12:17 pm

செய்தி முன்னோட்டம்

தென் மாநிலங்களில் உள்ள தனியார் ஆம்னி பேருந்து ஆபரேட்டர்கள், நியாயமற்ற மற்றும் நிலைத்தன்மையற்ற சாலை வரிக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திங்கட்கிழமை (நவம்பர் 10) முதல் ஒருங்கிணைந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 1,500 ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்படுவதால், தென் மாநிலங்களுக்கு இடையேயான நீண்ட தூரப் பயணச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிக்கலுக்கு முக்கியக் காரணம், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அகில இந்திய அனுமதி (All India Permit) பெற்ற வாகனங்கள் மீதும், மாநில அரசுகள் கூடுதலாகச் சாலை வரிகளை விதிப்பதே என்று ஆபரேட்டர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கூடுதல் வரி

கூடுதல் வரிகளால் நிதிச் சுமை

தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் இங்கு மாநிலத்தில் வரி செலுத்துகின்ற போதிலும், அண்டை மாநிலங்களும் கூடுதல் வரிகளை விதிப்பது நிதிச் சுமையை அதிகரிக்கச் செய்வதாகத் தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த காலத்தில் தமிழ்நாடு அரசு பிற மாநில ஆம்னி பேருந்துகளுக்குச் சாலை வரியை விதித்ததில் இருந்து இந்தச் சிக்கல் தொடங்கியதாகவும், இப்போது மற்ற மாநிலங்களும் அதைப் பின்பற்றுவதாகவும் உரிமையாளர்கள் வாதிடுகின்றனர். இந்த மாநில அளவிலான கூடுதல் வரிகள், அகில இந்திய அனுமதி வழங்கும் அமைப்பின் நோக்கத்தையே சிதைப்பதாகவும், தனியார் இன்டர்-ஸ்டேட் பேருந்துகளின் இருப்பைக் கேள்விக்குறியாக்குவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

குற்றச்சாட்டு

கேரள மாநில சங்கமும் குற்றச்சாட்டு

வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு மத்தியில், கேரள மாநில டூரிஸ்ட் பேருந்து உரிமையாளர்கள் சங்கமும் தங்கள் பேருந்துகள் தமிழ்நாட்டிலும் கர்நாடகாவிலும் சட்டவிரோதமாகத் தடுத்து நிறுத்தப்பட்டு, அபராதம் விதிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் திங்கட்கிழமை மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சரைச் சந்தித்துத் தீர்வு காணத் திட்டமிட்டுள்ளது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு அரசு தரப்பில் ஓர் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.