ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா ஆதரவளித்தது சரிதான்; காங்கிரஸ் எம்பி சசி தரூர் கருத்து
ஷேக் ஹசீனா பங்களாதேஷின் பிரதமராக இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு இந்தியா உதவாமல் இருந்திருந்தால் அது அவமானமாக இருந்திருக்கும் என்று காங்கிரஸ் தலைவரும், முன்னாள் தூதரக அதிகாரியுமான சசி தரூர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த ஒரு பேட்டியில், "நாம் அவருக்கு உதவாமல் இருந்திருந்தால், அது இந்தியாவுக்கு அவமானமாக இருந்திருக்கும். நம்முடைய நண்பரை நாம் மோசமாக நடத்தியிருந்தால், யாரும் நம் நண்பராக இருக்க விரும்ப மாட்டார்கள். ஹசீனா ஜி அனைத்து இந்தியத் தலைவர்களுடனும் நல்ல உறவைக் கொண்டிருந்தார். அவர் இந்தியாவின் நண்பர்." என்று கூறினார். ஒரு நண்பர் பிரச்சனையில் இருக்கும்போது, உதவிக்கரம் நீட்டுவதற்கு முன் இருமுறை யோசிப்பது தவறு என அவர் மேலும் தெரிவித்தார்.
பதவியை ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த ஷேக் ஹசீனா
ஆகஸ்ட் 5 அன்று, தனக்கு எதிராக ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த மாணவர் போராட்டத்திற்குப் பிறகு, ஷேக் ஹசீனா பங்களாதேஷின் பிரதமர் பதவியில் இருந்து விலகி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். டெல்லிக்கு அருகில் உள்ள காஜியாபாத்தில் உள்ள ஹிண்டனில் உள்ள இந்திய விமானப்படையின் தளத்தில் வந்திறங்கிய அவர், அன்றிலிருந்து அங்கேயே தங்கியுள்ளார். அவர் பிரிட்டன் அல்லது அமெரிக்காவில் புகலிடம் கோருவார் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. இருப்பினும், பிரிட்டன் கோரிக்கையை நிராகரித்த நிலையில், அமெரிக்கா விசாவை ரத்து செய்தது. இந்நிலையில், ஷேக் ஹசீனாவின் மகன் வெளியிட்ட ஒரு வீடியோவில், ஹசீனா மீண்டும் பங்களாதேஷ் திரும்புவார் என்றும், வேறு நாட்டில் தஞ்சம் புக கோரிக்கை விடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.