
பாகிஸ்தான் என் வீடு போல என்ற சர்ச்சை கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா விளக்கம்
செய்தி முன்னோட்டம்
இந்திய வெளிநாட்டுக் காங்கிரஸின் தலைவர் சாம் பிட்ரோடா, பாகிஸ்தானின் சில பகுதிகள் என் வீடு போல என்ற தனது சர்ச்சைக்குரிய கருத்து குறித்து விளக்கம் அளித்துள்ளார். சமூக வலைதளங்களில் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள பகிரப்பட்ட வரலாறு மற்றும் மக்கள் இடையிலான உறவை வலியுறுத்துவதே தனது கருத்தின் நோக்கம் என்று அவர் கூறியுள்ளார். இந்தியாவின் உலகளாவிய நிலைப்பாடு குறித்து நேர்மையான விவாதத்தை ஊக்குவிப்பதே தனது நோக்கம் என்று சாம் பிட்ரோடா தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை வெறும் பகட்டுக்காக இல்லாமல், உண்மையான செல்வாக்கு, பரஸ்பர நம்பிக்கை மற்றும் பிராந்திய நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
விமர்சனம்
சாம் பிட்ராடோ கருத்துக்கு விமர்சனம்
ஜனநாயக விழுமியங்கள், சுதந்திரமான தேர்தல்கள் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். சாம் பிட்ரோடாவின் இந்தக் கருத்துகள் உடனடியாக பாஜகவின் விமர்சனத்துக்குள்ளாகின. காங்கிரஸ் தலைமை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்தது. இந்த கருத்து இந்திய ராணுவத்தை அவமதிப்பதாகவும், மும்பை தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் மீது காங்கிரஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பாஜக குற்றம் சாட்டியது. தனது வார்த்தைகள் யாருக்கேனும் குழப்பத்தையோ அல்லது வருத்தத்தையோ ஏற்படுத்தியிருந்தால், அது வேண்டுமென்றே அல்ல என்று பிட்ரோடா தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளார்.