LOADING...
ரிஷிகேஷில் கங்கையின் குறுக்கே கண்ணாடி தொங்கு பாலம் அமைப்பு; இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்
ரிஷிகேஷில் கங்கையின் குறுக்கே கண்ணாடி தொங்கு பாலம் அமைப்பு

ரிஷிகேஷில் கங்கையின் குறுக்கே கண்ணாடி தொங்கு பாலம் அமைப்பு; இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 30, 2025
03:03 pm

செய்தி முன்னோட்டம்

உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷ் நகரில், புனித நதியாக போற்றப்படும் கங்கை ஆற்றின் குறுக்கே பிரம்மாண்டமான கண்ணாடித் தொங்கு பாலமான பஜ்ரங் சேது (Bajrang Setu) விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது. சுமார் ஒரு நூற்றாண்டு காலம் கம்பீரமாக நின்ற, அடையாளச் சின்னமாக விளங்கிய லட்சுமண் ஜூலா பாலம் பலவீனமானதைத் தொடர்ந்து மூடப்பட்ட அதே இடத்தில், தற்போது இந்தப் புதிய, பாதுகாப்பான பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் இப்பகுதியைக் காணும் அனுபவம் முழுமையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் ₹60 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் பஜ்ரங் சேது, 132 மீட்டர் நீளமும் 8 மீட்டர் அகலமும் கொண்டது.

கேதார்நாத் கோயில்

கேதார்நாத் கோயிலின் கட்டிடக்கலை 

அதிகப் பயன்பாட்டைத் தாங்கும் வகையில் மேம்பட்டப் பொருட்களைப் பயன்படுத்தி இது அமைக்கப்பட்டுள்ளது. இதன் கோபுரங்கள் புனித கேதார்நாத் கோயிலின் கட்டிடக்கலையைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பொதுப்பணித் துறையின் நிர்வாகப் பொறியாளர் பிரவீன் கர்ன்வால் கருத்துப்படி, பஜ்ரங் சேதுவின் கட்டுமானம் பெரும்பாலும் நிறைவடைந்துவிட்டது. சுமார் 90% பணிகள் முடிந்துவிட்டன. பாதசாரிகள் நடந்து செல்லும் பாதையில் கண்ணாடியைப் பொருத்தும் பணி மட்டுமே எஞ்சியுள்ளது. இந்தப் பாலத்தின் மிகவும் ஈர்க்கக்கூடிய அம்சம், அதன் கண்ணாடி நடைபாதைகள் ஆகும். இருபுறமும் 1.5 மீட்டர் அகலம் கொண்ட இந்த நடைபாதைகள் 66 மிமீ தடிமனில் வலுவூட்டப்பட்ட கண்ணாடியால் செய்யப்படுகின்றன.

2026 

2026 தொடக்கத்தில் திறப்பு

இதில் நிற்கும் பயணிகள், தங்களுக்குக் கீழே ஓடும் கங்கையைப் பார்க்கும் அனுபவத்தைப் பெறுவார்கள். நடுப்பாதை இருசக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கிறது. பாலம் டிசம்பர் 2025க்குள் தயாராகி, 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலா அதிகாரிகள் இந்தப் பாலம் ரிஷிகேஷின் மிகவும் விரும்பப்படும் தளங்களில் ஒன்றாக மாறும் என்று நம்புகிறார்கள்.