திருப்பதி கோயிலில் மொட்டை அடிக்க காரணம் - பல சுவாரஸ்ய தகவல்கள்
ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள வெங்கடேசப்பெருமாள் இந்தியாவிலேயே மிகப்பெரிய பணக்கார கடவுள் என்று மக்களால் கூறப்பட்டு வருகிறது. அப்பேற்பட்ட புகழ்மிக்க திருப்பதி கோயில் குறித்த பெரிதும் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்களை இந்தப்பதிவு தெரிவிக்கவுள்ளது. அதன்படி, திருப்பதியில் உள்ள வெங்கடேசப்பெருமாளுக்கு சார்த்தப்படும் பூ, அபிஷேகப்பால், தயிர், மோர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்கள், துளசிஇலைகள் என அனைத்தும் ஒரு கிராமத்தில் இருந்து பெருமாளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு கொண்டுவரப்படுகிறதாம். அந்த கிராமமே பெருமாளுக்காக வேலைபார்க்கும் நிலையில், அந்த கிராமத்திற்கு இதுவரை யாரும் சென்றதில்லையாம். திருப்பதியில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமத்திற்கு அர்ச்சகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து பெருமாள் பூலோகம் வந்த போது நிகழ்ந்த போர்க்களத்தில் அவரது முடியில் சிலவற்றினை இழந்துள்ளார்.
திருப்பதியில் முடி காணிக்கை கொடுப்பதன் வரலாறு
அதனை அறிந்த காந்தர்வ பேரரசி நீலாதேவி தன்னுடைய கூந்தலை அறுத்து பெருமாள் சிலை முன்பு வைத்து, ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டியுள்ளார். அதனை ஏற்றுக்கொண்ட பெருமாளும் அதனை ஏற்றுக்கொண்டாராம். இதனால் பெருமாளின் உருவத்தில் பதிக்கப்பட்டுள்ள முடி உண்மையானது என கூறப்படுகிறது. மேலும் இதனால் தான் பெருமாளை தரிசிக்க வரும் பக்தர்கள் அனைவரும் தங்கள் முடியினை காணிக்கையாக கொடுப்பதாக வரலாறு கூறுகிறது. மேலும் திருப்பதி மூலஸ்தானத்தில் பெருமாள் சிலை நடுவில் இருப்பதுபோல் தெரியும். ஆனால் தொழில்நுட்ப ரீதியாக பார்த்தால் அந்த சிலை மூலஸ்தானத்தின் வலதுப்பக்க மூலையில் அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது. பெருமாள் சிலை பின்புறம் காதை வைத்துக்கேட்டால் கடல் அலைகள் சத்தம் கேட்குமாம். அதனால் அவர் பாற்கடலில் இருக்கும் அமைப்பு கண்ணுக்கு தெரியாமல் உள்ளது என்றும் நம்பப்படுகிறது.