தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
தமிழக அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் குறித்த அறிக்கையானது வரும் 20ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இது தொடர்பாக கடந்த 9ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என மக்கள் மத்தியில் ஏதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது. அதன்படி தமிழக தேர்தலின் போது திமுக அறிக்கையில் மாதந்தோறும் மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் இம்முறை பட்ஜெட் தாக்கலில் இடம்பெறும் என்று அண்மையில் தமிழக முதல்வர் கூறினார். இது மேலும் பட்ஜெட் தாக்கல் மீதான ஆவலை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
தலைமை செயலகத்தில் ஆலோசனை
இதனை தொடர்ந்து நேற்று(மார்ச்.,15) இரவு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமை செயலகம் வந்துள்ளார். அவரது அறைக்கு சென்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முக்கியமான சில ஆலோசனைகளை நடத்தினார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பானது கிட்டத்தட்ட அரை மணிநேரம் தொடர்ந்த நிலையில், பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது. அதிலும் முக்கியமாக தமிழக பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தினை எப்போதிருந்து நடைமுறைப்படுத்தலாம் என்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதாக கோட்டை வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.