மதுரைக்கு வருகை தரும் இந்திய ஜனாதிபதி - 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை
தமிழகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு இந்திய ஜனாதிபதியான திரவுபதி முர்மு அவர்கள் வருகை தரவுள்ளார். வரும் 18ம் தேதியன்று திரவுபதி முர்மு அவர்கள் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு மதுரை விமான நிலையம் வருகிறார். இதனை தொடர்ந்து மதியம் 12 மணியளவில் மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்யவுள்ளார். அதன் பின்னர் அவர் விமானம் மார்க்கமாக அங்கிருந்து கோவைக்கு செல்கிறார். இதனையடுத்து அவர் கோவை ஈஷா மையத்தில் நடைபெறவுள்ள மகா சிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார். பின்னர் அன்றிரவு அவர் அங்கேயே தங்கவுள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை ஆய்வு
இதனை தொடர்ந்து அவர் பிப்ரவரி 19ம் தேதி டெல்லிக்கு திரும்புகிறார். இவரின் வருகையையொட்டி காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னரே துவங்கிவிட்டார்கள். அதன் ஒரு பகுதியாக ஜனாதிபதி வருகை தரும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், உளவுத்துறை ஐ.ஜி., செந்தில்வேலவன், நகர் போலீஸ் உதவி கமிஷனர்கள் உள்ளிட்டோர் ஆய்வினை அண்மையில் மேற்கொண்டனர். இந்நிலையில், ஜனாதிபதி திரெளபதி முர்மு வருகையையொட்டி பிப்ரவரி 17 மற்றும் 18 தேதிகளில் மதுரையில் ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்படுவதாக மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து ரயில்வே நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு என்பது குறிப்பிடத்தக்கது.