காஞ்சிபுரத்தின் பாரம்பரிய பெருமைகளை எடுத்துரைக்கும் அஞ்சல் அட்டைகள் வெளியீடு
உலக பாரம்பரிய தினமான இன்று(ஏப்ரல்.,18) உலக பாரம்பரிய நகரத்தில் ஒன்றாக உள்ள காஞ்சிபுரத்தின் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையில் 12 ஓவியங்களை கொண்டு இந்தியாவின் அஞ்சல் துறை, அஞ்சல் அட்டைகளை வெளியிட்டுள்ளது. பாரம்பரிய நகரமான காஞ்சிபுரம் சங்க பாடல்களில் மட்டுமின்றி, நாயன்மார்கள், ஆழ்வார்கள் பாடல்களிலும் முக்கிய இடத்தினை பிடித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு மாநிலம் காஞ்சிபுரத்தில் உள்ள 12 கோயில்களை 'யுனஸ்கோ' உலகின் பாரம்பரிய சின்னங்களின் முதல் தேர்வு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் இந்திய அஞ்சல் துறை இன்று ஓர் புது முயற்சினை செய்துள்ளது. அதன்படி, காஞ்சியின் கலாச்சார பாரம்பரிய விஷயங்களை நீர் வண்ண ஓவியங்களாக வரைந்து, அஞ்சல் அட்டையினை தயார் செய்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
கைலாச நாதர் கோயிலில் நடைபெற்ற அஞ்சல் அட்டை வெளியீடு
இந்த அஞ்சல் அட்டை வெளியீடானது இன்று காலை 10 மணியளவில் கைலாச நாதர் கோயிலில் நடைபெற்றது. அந்த அஞ்சலில் பொம்மைக்காரர், கட்டை கூத்து கலைஞர் பட்டு நெசவுக்காரர், காஞ்சி கைலாசநாதர், காமாட்சியம்மன், வரதராஜப்பெருமாள், வைகுந்தப்பெருமாள், கைலாசநாதர், ஏகாம்பரேஸ்வரர் கோயில்கள், நடவாவி கிணறு, மாமண்டூர் குகைக்கோயில் ஆகியவை அஞ்சல் அட்டையின் அடையாளமாக மாறுகின்றனர். இந்த ஓவியங்கள் அனைத்தும் முரளிதரன் அழகர் என்னும் ஓவியர் வரைந்துள்ளார். இந்த அஞ்சல் அட்டைகள் வாழ்த்து அட்டைகளாக பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுர புடவைகளில் அதிகமாக இடம்பெறும் அன்னப்பறவையின் படத்தை, நிரந்தர சித்திர முத்திரையாக பயன்படுத்த காஞ்சிபுரம் மாவட்ட அஞ்சல் துறை ஒப்புதல் பெற்றுள்ளது.