
பாமக சட்டப்பேரவை தலைவர் பதவியிலிருந்து ஜி.கே.மணி நீக்கம்: அன்புமணி ராமதாஸ் அதிரடி
செய்தி முன்னோட்டம்
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சியின் அடிப்படை விதிகள் மற்றும் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி, அக்கட்சியின் மூத்த நிர்வாகியான ஜி.கே.மணி வகித்த பதவியைப் பறித்து உத்தரவிட்டுள்ளார். ஜி.கே.மணி வகித்து வந்த பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் பதவிக்குப் பதிலாக, தர்மபுரி வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பாமகவின் சட்டமன்ற கொறடாவாக மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாற்றங்கள் தொடர்பான கடிதம் சட்டமன்றச் செயலகத்தில் அளிக்கப்பட்டுள்ளதாக பாமக தரப்பு தெரிவித்துள்ளது. கட்சித் தலைவராக அன்புமணியின் பதவி காலத்தை நீட்டித்து, அதற்கான தீர்மானத்திற்கு தேர்தல் ஆணையம் செப்டம்பர் 9 ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது.
மாம்பழம் சின்னம்
மாம்பழம் சின்னம் அன்புமணிக்குதான் சொந்தம்
இதன் மூலம், மாம்பழம் சின்னம் மற்றும் தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களுக்கான ஏ, பி படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரம் அன்புமணி ராமதாஸிற்கு மட்டுமே உள்ளது என்பதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதற்கிடையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட அருள் எம்எல்ஏ பாமகவைச் சேர்ந்தவர் போல் பேசி வருவதால் நிர்வாகிகளிடையே குழப்பம் ஏற்படுவதாகக் கூறி, அருளை சட்டமன்ற உறுப்பினராக மட்டுமே கருத வேண்டும் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் கே.பாலு வலியுறுத்தியுள்ளார்.
சட்டமன்றம்
சட்டமன்றக் கூட்டத்தொடர்
அக்டோபர் 14 ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றக் கூட்டத்தொடரில், புதிய சட்டமன்றக் குழுத் தலைவர் தர்மபுரி வெங்கடேசனுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்ய சபாநாயகர் மு.அப்பாவுவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் அன்புமணி தரப்புக்கே பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகவும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பாமக அங்கம் வகிக்கும் கூட்டணியே தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றும் பாமக தரப்பு தெரிவித்துள்ளது.