மன் கி பாத் உரை: நாட்டின் பாதுகாப்பு மற்றும் தற்சார்பு துறைகளில் வரலாற்று சாதனைகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!
செய்தி முன்னோட்டம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் தொடரின் 135 ஆவது பகுதியில் இன்று (ஜூன் 28) நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் நாடு அடைந்துள்ள முக்கிய தற்சார்பு சாதனைகளைப் பட்டியலிட்டுள்ளார். குறிப்பாக, ஜூன் மாதத்தில் மட்டும் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு மற்றும் ராணுவ தற்சார்பு துறைகளில் ஒவ்வொரு இந்தியக் குடிமகனையும் பெருமிதத்தில் ஆழ்த்தக்கூடிய பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க மைல்கற்கள் எட்டப்பட்டுள்ளதாகப் பிரதமர் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
கடற்படை
இந்தியக் கடற்படையில் இணைந்த 3 நவீன உள்நாட்டுக் கப்பல்கள்
பிரதமர் மோடி தனது அண்மைய கொல்கத்தா பயணத்தை நினைவு கூர்ந்து பேசுகையில், அங்கு நடைபெற்ற மிக முக்கியக் கடற்படை நிகழ்வில் ஐஎன்எஸ் துனகிரி, ஐஎன்எஸ் சன்ஷோதக் மற்றும் ஐஎன்எஸ் அக்ரே ஆகிய 3 அதிநவீனப் போர்க்கப்பல்கள் இந்தியக் கடற்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டினார். இந்த பிரம்மாண்ட போர்க்கப்பல்களின் ஆரம்பக்கட்ட வடிவமைப்பு முதல் இறுதி உற்பத்திக் கட்டமைப்பு வரை அனைத்தும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது நாட்டின் வளர்ந்து வரும் பாதுகாப்புத் திறனை உலகிற்குப் பறைசாற்றுகிறது.
விமான கட்டமைப்பு
சி-295 ராணுவ போக்குவரத்து விமானம் மற்றும் குரூஸ் ஏவுகணையின் சாதனைப் பயணம்
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ மூலம் ஜூன் மாதத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நீண்டதூர தரைவழித் தாக்குதல் குரூஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறையில் மிகப்பெரிய சாதனையாக, முற்றிலும் இந்தியாவிலேயே கட்டமைக்கப்பட்ட சி-295 என்ற நவீனப் போக்குவரத்துப் போர்விமானம் தனது முதற்கட்டப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதுடன், இத்தகைய 40 விமானங்கள் இந்திய மண்ணிலேயே தற்பொழுது உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
மக்களுக்கு நன்றி
தங்கம் வாங்குவதைத் தவிர்த்த மக்களுக்குப் பிரதமர் மோடி நன்றி
மத்திய கிழக்கு பகுதியில் தற்பொழுது நிலவி வரும் கடுமையான போர் சூழலைக் கருத்தில் கொண்டு, நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பிற்காகப் பொதுமக்கள் அனைவரும் சில காலத்திற்குத் தங்கம் வாங்குவதைத் தவிக்குமாறு பிரதமர் மோடி முன்னதாகக் கோரிக்கை விடுத்திருந்தார். பிரதமரின் இந்த வேண்டுகோளை ஏற்றுத் தங்கம் வாங்குவதைக் குறைத்துக் கொண்டது மட்டுமின்றி, ஒரே திசையில் பயணிப்பவர்கள் தங்களது தனித்தனி வாகனங்களைத் தவிர்த்து விட்டு கார்பூலிங் (Carpooling) முறையில் ஒரே வாகனத்தைப் பகிர்ந்து பயணித்து எரிபொருளை சேமித்து வரும் இந்திய மக்களுக்கு அவர் நன்றியைத் தெரிவித்தார்.
விபத்துக் காப்பீடு
3,500 கிராம மக்களுக்கு விபத்து காப்பீடு வழங்கிய மராட்டியக் குடும்பம்
மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் மாவட்டத்தில் உள்ள பகதூர்புரா கிராமத்தை சேர்ந்த பெத்கர் குடும்பத்தினர் தங்களது வீட்டுத் திருமண விழாவில், உறவினர்களுக்கு வழக்கமான ஆடம்பரப் பரிசுகளை வழங்குவதற்குப் பதிலாக, ஒட்டுமொத்த கிராமத்தை சேர்ந்த சுமார் 3,500 ஏழை மக்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தை தங்களது சொந்த செலவில் எடுத்துக் கொடுத்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். இவர்களின் இந்த உன்னதமான மனிதாபிமான செயலைப் பிரதமர் மோடி மன் கி பாத் உரையில் பாராட்டியுள்ளார்.
காப்பீட்டுத் திட்டங்கள்
வெறும் 20 ரூபாயில் 2 லட்சம் வழங்கும் மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டங்கள்
மத்திய அரசின் மிக முக்கிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களான பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா மூலம் ஆண்டுக்கு வெறும் 20 ரூபாய் பிரீமியம் தொகையில் ஏழை எளிய மக்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரையிலான விபத்துக் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், ஆண்டுக்கு வெறும் 436 ரூபாய் பிரீமியத்தில் (அதாவது ஒரு நாளைக்கு வெறும் 1.50 ரூபாய் செலவில்) 2 லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீடு வழங்கும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் இதுவரை 11 லட்சம் குடும்பங்களுக்குச் சுமார் 22,000 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
யுனெஸ்கோ அங்கீகாரம்
வாழும் வேர்ப் பாலங்களுக்கு யுனெஸ்கோ பாரம்பரிய அங்கீகாரம்
மேகாலயா மாநிலத்தின் உலகப் புகழ்பெற்ற 'வாழும் வேர்ப் பாலங்கள்' மனிதனுக்கும் இயற்கைக்குமான உன்னதப் பிணைப்பின் அடையாளம் என்று போற்றிய பிரதமர், மரங்களின் வேர்களைக் கொண்டு பல தசாப்தங்களாக வளர்த்தெடுக்கப்படும் இந்தப் பாலங்களை யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் இணைக்க இந்தியா விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்தார். இறுதியாகப் பீகாரின் நாளந்தா பல்கலைக்கழகம் தற்பொழுது பழங்கால சாஸ்திரார்த்த விவாத முறையை மீண்டும் உயிர்ப்பித்துள்ளதையும், டெல்லி மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகம் ஏஐ மற்றும் டேட்டா சயின்ஸ் பிரிவில் பி.டெக் படிப்பைத் தொடங்கியுள்ளதையும் பாராட்டிய பிரதமர், 'கேட்ச் தி ரெயின்' (Catch the Rain) இயக்கம் மூலம் மழைநீரை சேமிக்க அழைப்பு விடுத்தார்.