LOADING...
சர்வதேச யோகா தினம் 2026: "30ஐ விட 50 வயதில் எனர்ஜியா இருக்கணும்!" பிரதமர் மோடி அறிவுரை
கொல்கத்தாவில் நடந்த சர்வதேச யோகா தினம் 2026 நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்பு

சர்வதேச யோகா தினம் 2026: "30ஐ விட 50 வயதில் எனர்ஜியா இருக்கணும்!" பிரதமர் மோடி அறிவுரை

எழுதியவர் Sekar Chinnappan
Jun 21, 2026
08:11 am

செய்தி முன்னோட்டம்

உலகெங்கும் இன்று 12வது சர்வதேச யோகா தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற பிரம்மாண்ட யோகா தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகக் கலந்துகொண்டார். இந்த விழாவில் மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் சுவேந்து அதிகாரி ஆகியோரும் பிரதமருடன் இணைந்து பங்கேற்றனர். அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, உலகை ஒன்றிணைக்கும் யோகாவின் சக்தி குறித்தும், ஆரோக்கியமான முதுமையின் அவசியம் குறித்தும் மிக முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

யோகா

உலகை இணைக்கும் உன்னத சக்தி யோகா

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "இன்று ஒட்டுமொத்த நாடும், உலகமும் யோகா மூலம் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருப்பது போல் தோன்றுகிறது. இதுதான் யோகாவின் உண்மையான சக்தி. யோகா அனைவரையும் ஒன்றிணைக்கிறது. இந்தத் தருணத்தில் ஒட்டுமொத்த உலகிற்கும், மனித சமுதாயத்திற்கும் எனது மனமார்ந்த யோகா தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், யோகா தினத்தை முன்னிட்டு இன்று மேற்கு வங்காள மக்கள் மேற்கொண்டுள்ள பிரம்மாண்ட தூய்மைப் பணியைப் பாராட்டுகிறேன். இது ஒரு அற்புதமான முயற்சி." என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

ஆன்மீகம்

ஆன்மீக மண்ணில் யோகாசனம் செய்த உன்னத அனுபவம்

மேற்கு வங்காளத்தின் ஆன்மீகச் சிறப்புமிக்க மண்ணில் இந்த விழாவைக் கொண்டாடுவதைத் தனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம் என்று குறிப்பிட்ட பிரதமர், யோகா பாரம்பரியத்திற்கு இந்த மாநிலம் ஆற்றியுள்ள பங்களிப்பை நினைவு கூர்ந்தார். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் மற்றும் லாகிரி மகாசாயர் போன்ற போற்றத்தக்க ஆன்மீக ஞானிகளின் வழிகாட்டுதல்கள் தான் யோகாவை உலகறியச் செய்தன என்று அவர் போற்றினார். இத்தகைய சிறந்த மகான்களும் யோகிகளும் வாழ்ந்த புனித பூமியில் பெருந்திரள் யோகா அமர்வில் பங்கேற்பது ஒரு ஆழமான ஆன்மீக அனுபவத்தை அளிப்பதாக அவர் கூறினார்.

Advertisement

பிரதமர் அறிவுரை

"30 வயதை விட 50 வயதில் சுறுசுறுப்பாக இருங்கள்" - பிரதமர் மோடி அறிவுரை

நவீன காலத்திற்கு யோகா எவ்வளவு அவசியமானது என்பதை வலியுறுத்திய பிரதமர் மோடி, யோகா என்பது வெறும் தனிமனித நல்வாழ்விற்கானது மட்டுமல்ல, மனிதகுலத்தின் ஆரோக்கியமான மற்றும் இணக்கமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் இன்றியமையாதது என்றார். மேலும், "யோகாவை ஏதோ வருடத்தில் ஒருமுறை கொண்டாடும் நிகழ்வாகப் பார்க்காமல், அதனை உங்களது அன்றாட வாழ்வியல் நெறியாக மாற்றிக் கொள்ளுங்கள். மனிதர்கள் தங்களது 30 வயதில் இருந்ததை விட, 50 வயதை எட்டும்போது இன்னும் அதிக உடற்தகுதியுடனும், சுறுசுறுப்புடனும், மன உறுதியுடனும் இருப்பதை யோகா மூலம் உறுதி செய்ய வேண்டும்" என்று மக்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

Advertisement

கருப்பொருள்

2026 யோகா தினத்தின் முக்கியக் கருப்பொருள்

தனது எழுச்சியூட்டும் உரைக்குப் பிறகு, மைதானத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுடன் அமர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டினார். இந்த ஆண்டிற்கான சர்வதேச யோகா தினத்தின் அதிகாரப்பூர்வ கருப்பொருள் "ஆரோக்கியமான முதுமைக்கான யோகா" (Yoga for Healthy Ageing) என்பதாகும். உடல் ஆரோக்கியத்தைப் பேணுதல், மன நலனை ஆதரித்தல், உணர்ச்சி ரீதியான பின்னடைவுகளை எதிர்கொள்ளுதல் மற்றும் வயதான காலத்திலும் சுறுசுறுப்பாக செயல்பட யோகா எவ்வாறு துணையாக நிற்கிறது என்பதை இந்த ஆண்டின் கருப்பொருள் மிக ஆழமாக உணர்த்துகிறது.

Advertisement