சுமார் 50 காட்டு பன்றிகள் உயிரிழப்பு: தமிழகத்தில் பன்றி காய்ச்சலா?
தமிழகத்தில் கடந்த 1 வாரத்தில் 20 காட்டு பன்றிகள் பன்றி காய்ச்சலால் உயிரிழந்துள்ளன. மொத்தமாக சுமார் 50 காட்டு பன்றிகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் கடந்த ஒரு மாதமாக 100க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் உயிரிழந்தது. இந்நிலையில், தமிழகத்தின் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு பகுதியில் சுற்றித்திரியும் 20க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகளும் கடந்த ஒரு வாரத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன. இதைத்தொடர்ந்து, இறந்த காட்டுப்பன்றிகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தபோது, ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவியதால் அவை உயிரிழந்தது தெரியவந்தது.
மாவட்ட ஆட்சியர் பேட்டி:
இதையடுத்து, தமிழக வனத்துறையினர் சில காவலர்களை அனுப்பி, அடர்ந்த வனப் பகுதிகளில் காட்டுப்பன்றிகளின் சடலங்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். புலிகள் காப்பகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கவனித்து கொள்ளும் ஊட்டி மாவட்ட ஆட்சியர் அம்ரித் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "முதுமலை புலிகள் காப்பகத்தில்(MTR) காட்டுப்பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவி வருவது தெரிய வந்துள்ளது. இந்த வைரஸ் மனிதர்களையோ அல்லது மற்ற காட்டு விலங்குகளையோ பாதிக்க வாய்ப்பில்லை." மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வைரஸ் பரவி வருவதால், ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் குறித்து, அந்த மாவட்ட கலெக்டர்களுடன் மத்திய கால்நடை பராமரிப்புத்துறையினர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த உள்ளனர்.