LOADING...
சர்க்கரை, ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட 39 மருந்துகளுக்கு விலை உச்சவரம்பு நிர்ணயித்தது மத்திய அரசு
சர்க்கரை, ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட 39 மருந்துகளுக்கு மத்திய அரசு விலை உச்சவரம்பு நிர்ணயம்

சர்க்கரை, ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட 39 மருந்துகளுக்கு விலை உச்சவரம்பு நிர்ணயித்தது மத்திய அரசு

எழுதியவர் Sekar Chinnappan
Jul 11, 2026
08:46 pm

செய்தி முன்னோட்டம்

நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற நீண்டகால மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோய்களுக்கான 39 புதிய மருந்து தயாரிப்புகளின் சில்லறை விலைக்கான உச்ச வரம்பை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. மருந்துகள் விலை கட்டுப்பாட்டு ஆணை 2013ன் கீழ், தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் இந்த புதிய விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது. நுகர்வோரின் மருத்துவ செலவுகளைக் குறைக்கும் நோக்கில் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய விலை

அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய மருந்துகளின் புதிய விலை விபரங்கள்

மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த புதிய அறிவிப்பின்படி, இதய நோய், புற்றுநோய், கண் தொற்றுகள், வைட்டமின் குறைபாடுகள் போன்ற நோய்களுக்கான மருந்துகளின் விலை முறைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் உயர் ரத்த அழுத்தத்திற்கான அம்லோடிபைன் பைசோப்ரோலால் டெல்மிசார்டன் மாத்திரை ஒன்றின் விலை 14 ரூபாய் 74 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கும் குளோபிடோக்ரல் ஆஸ்பிரின் அடோர்வாஸ்டாடின் கேப்சூல் ஒன்றின் விலை 6 ரூபாய் 37 காசுகளாகவும், கண் தொற்றுகளுக்கான சொட்டு மருந்து ஒரு மில்லி 68 ரூபாய் 64 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அவசரகால மருந்து

அவசர கால மருத்துவ ஊசிகளுக்கான புதிய உச்சவரம்பு விலை

மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற கடுமையான அவசர காலங்களின் போது, மனித உடலில் ஏற்படும் ஆபத்தான ரத்த உறைவுகளைக் கரைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் மரபணு மாற்றப்பட்ட அதிநவீன டெனெக்டெப்லேஸ் ஊசி மருந்தின் விலையையும் இந்த புதிய உத்தரவில் வாரியம் கட்டுப்படுத்தியுள்ளது. இதன்படி, இந்த முக்கிய அவசர கால ஊசி மருந்தின் விலை ஒரு குப்பிக்கு 60,238 ரூபாய் 27 காசுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் கட்டுப்பாட்டின் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் அவசர மருத்துவ செலவுகள் பெருமளவு குறையும்.

Advertisement

கடும் நடவடிக்கை

விதிகளை மீறி கூடுதல் விலைக்கு விற்றால் கடுமையான நடவடிக்கை

இந்த புதிய அறிவிப்பின்படி, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தங்களது மருந்துப் பொட்டலங்களில் புதிய மாற்றியமைக்கப்பட்ட விலையை மட்டுமே அச்சிட்டு நுகர்வோருக்கு விற்பனை செய்ய வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாக விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு விதிகளை மீறி கூடுதல் விலைக்கு விற்றால், அந்த உபரி தொகையை வட்டியுடன் சேர்த்துத் திரும்பப் பெற ஆணையத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. பொதுமக்கள் இதுகுறித்து தங்களது புகார்களைத் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்திடம் நேரடியாகத் தெரிவிக்கலாம்.

Advertisement