தஞ்சை மண்ணில் பிறந்த நம்மாழ்வார் பிறந்தநாள் இன்று
தஞ்சை மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள இளங்காடு என்னும் கிராமத்தில் பிறந்த நம்மாழ்வாரின் பிறந்த நாள் இன்று(ஏப்ரல்.,6). விவசாயக்குடும்பத்தில் பிறந்த இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளநிலை படிப்பினை முடித்துள்ளார். கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் உதவிஆய்வாளாராக சேர்ந்த இவரால் பசுமை புரட்சியால் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் பணியில் இருந்து நீங்கிய அவர், இந்தியாவில் உணவு பஞ்சத்தை போக்க கொண்டுவரப்பட்ட பசுமை புரட்சி காரணமாக ஏற்படும் விளைவுகளை எழுத்து மற்றும் உரையாடல் மூலமாக தனது வாழ்நாள் முழுவதும் எடுத்துரைத்தார். பல கிராமங்களுக்கு நடைபயணம் மேற்கொண்டு இயற்கைவிவசாயத்தின் அவசியத்தை மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார். இன்றைய படித்த இளைஞர்கள் இயற்கை வேளாண்மை பக்கம் திரும்ப முக்கிய காரணம் நம்மாழ்வாரின் முப்பதாண்டுகால பயணம் இருக்கிறது என்பது குறிப்பிடவேண்டியவை.
போராட்டக்களத்திலேயே உயிர்நீத்த நம்மாழ்வார்
இயற்கை விவசாயம் மூலம் பயிர்கள் சேதமாவதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்து, அதன் மூலம் பொருளாதார ரீதியாகவும் பயன்பெறலாம் என்று கூறியுள்ளார். வீரியரக விதைகளின் வருகையால் நமது பாரம்பரிய விதைகள் அழிவினை சந்திக்கும் தருவாயில் இருந்தது. அந்நிலையில் மாப்பிள்ளை சம்பா, யானைக்கவுனி, குடவாழை, குழியடிச்சான் போன்ற நூற்றுக்கணக்கான பாரம்பரிய நெல்வகைகளை விவசாயிகளுக்கு மீட்டு தந்தவர் நம்மாழ்வார். மேலும் நம்நாட்டு வேப்ப மரத்துக்கான காப்புரிமையினைப்பெற ஜெர்மனியில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடி மீட்டெடுத்தவர் நம்மாழ்வார். இப்படி தனது வாழ்நாள் முழுவதும் இயற்கைவிவசாயத்தை முழுவதுமாக கொன்டுவரப்போராடி, மீத்தேன் திட்டத்திற்கு எதிர்ப்புத்தெரிவித்து தொடர்ந்து போராடி, போராட்டக்களத்திலேயே தனது உயிரினை விட்டார். மகாத்மா காந்தியை போல் மேல்சட்டையினை துறந்து எளிமையான வாழ்வினை வாழ்ந்த இவர் 2013ம்ஆண்டு டிசம்பர் 30ம்தேதி காலமானார்.