நாமக்கல் தனியார் கல்லூரி விடுதி சம்பவத்தில் சிலர் உயிரிழந்ததாக வதந்தி பரப்புபவர்களுக்கு காவல்துறை கடும் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி விடுதியில் உணவருந்திய மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு, சிலர் உயிரிழந்ததாகச் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட தவறான தகவல்கள் தொடர்பாக நாமக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்துப் பொய்ச் செய்தி பரப்பியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருச்செங்கோடு உட்கோட்டம், குமாரபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்ஸல் கல்வி நிறுவனங்களில் சில மாணவர்கள் திங்கட்கிழமை (அக்டோபர் 27) அன்று வயிற்றுப் போக்கு மற்றும் வாந்திப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிகிச்சை
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை
பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர்கள் உடனடியாகக் கல்லூரி மருத்துவ மையத்திலும், குமாரபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று, உடல்நிலை சீரானதைத் தொடர்ந்து விடுமுறையில் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர். மாணவர்கள் அனைவரும் நலமாக இருக்கும் நிலையில், Pokkiri_Victor (@Pokkiri_Victor) மற்றும் Phoenix Vignesh (@PhoenixAdmk) என்ற பெயர்களில் உள்ள எக்ஸ் சமூக வலைதளப் பக்கங்களில் சிலர் மாணவர்கள் இறந்துவிட்டதாக பதிவேற்றம் செய்துள்ளனர். இத்தகைய பொய்யான தகவல்களை பரப்புவது சமூகத்தில் பதற்றத்தையும் சட்ட ஒழுங்குப் பிரச்சினையையும் ஏற்படுத்தும் நோக்குடன் சமூக விரோதிகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
வதந்தி
வதந்தி பரப்புபவர்களுக்கு எச்சரிக்கை
இந்த வதந்திகளைப் பரப்பியது தொடர்பாகப் பெறப்பட்ட புகாரின் பேரில், குமாரபாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இது போன்ற தவறான தகவல்களைச் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வோர் மீது சட்ட ரீதியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.