பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று 'தாயுமானவர்' திட்டத்தில் மாற்றங்கள் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தை குறைக்க, ரேஷன் பொருட்களை அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று வழங்கும் 'முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்' தற்போது முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பொருட்களைப் பெறுவதில் சில புதிய நடைமுறைகளை அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அதன்படி கருவிழி ஸ்கேனிங் அல்லது பெருவிரல் ரேகை பதிவு செய்யமுடியாவிட்டால், கையெழுத்தை பெற்றுக்கொண்டு ரேஷன் பொருட்களை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது பயோமெட்ரிக் (விரல் ரேகை) முறை கட்டாயமாக உள்ள நிலையில், இந்தத் திட்டத்தில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
மாற்றங்கள்
கையெழுத்து மற்றும் சரிபார்ப்பு முறை
ரேஷன் கடைகளில் பயனாளிகள் நேரில் பொருட்கள் வாங்கும்போது அவர்கள் பொருட்களைப் பெற்றுக் கொண்டதற்கான அடையாளமாக இடது கை பெருவிரல் ரேகையை பெற்றுக் கொண்டு பொருட்கள் வழங்கப்படுகின்றன. தாயுமானவர் திட்டத்திலும் இதையே பின்பற்றினர். கூடுதலாக அவர்களின் கண் கருவிழி ஸ்கேன் செய்யப்பட்டது. ரேஷன் விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 4ஜி சர்வர்கள் அடிக்கடி பழுதடைந்து செயல்படாததால், கைரேகை மற்றும் கண் கருவிழி சரிபார்ப்பதில் சிக்கல்கள் ஏற்படுவதாக ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இத்திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை பெறும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் கைரேகை அல்லது கண் கருவிழி பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், உரிய பதிவேட்டில் அவர்களின் கையெழுத்தை மட்டும் பெற்றுக்கொண்டு, ரேஷன் பொருட்களை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.