39 வருடம் பணிபுரிந்த அரசு ஆசிரியருக்கு கிராம மக்கள் தேர்ப்பவனியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று பிரியாவிடை
செய்தி முன்னோட்டம்
மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள தோபிவாடா கிராமத்தில், கிட்டத்தட்ட 39 ஆண்டுகள் பள்ளிக்குச் சேவை செய்த ஓய்வுபெறும் ஆசிரியருக்கு, அலங்கரிக்கப்பட்ட தேர்ப் பவனி மூலம் கிராம மக்கள் பிரியாவிடை அளித்து நெகிழ்ச்சியில் ஆழ்த்தினர். தோபிவாடா தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய மேக்ராஜ் பராட்கர், 1987ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி பணியில் சேர்ந்து, 38 ஆண்டுகள் 10 மாதங்கள் சேவைக்குப் பிறகு ஓய்வு பெற்றார். மாவட்ட கவுன்சில் உறுப்பினர் ஹரீஷ் உய்க்கே தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் பிரியாவிடை விழா, ஒட்டுமொத்தக் கிராம மக்களும் பங்கேற்ற ஒரு திருவிழா போல மாறியது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பராட்கர் அமரவைக்கப்பட்டு, உள்ளூர் இசைக் குழுவுடன் கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.
மரியாதை
கிராம மக்களும் மாணவர்களும் மரியாதை
ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டபோது கிராம மக்களும் மாணவர்களும் மிகுந்த உற்சாகத்துடன் நடனமாடி, தங்கள் அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தினர். ஒரு ஆசிரியரின் ஓய்வுக்காக இவ்வளவு பெரிய கூட்டம் கூடியது இதுவே முதல்முறை என்று கிராமவாசிகள் தெரிவித்தனர். உணர்ச்சிமிகு உரையாற்றிய ஆசிரியர் மேக்ராஜ் பராட்கர், திரண்டிருந்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அத்துடன், "குடியரசு தினத்தைக் காட்டிலும் இன்று அதிகக் கூட்டம் கூடியிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. கிராமத்தின் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டுமானால், அனைத்துப் பெற்றோரும் தங்கள் குழந்தைகளைத் தவறாமல் பள்ளிக்கு அனுப்ப வேண்டும்." என்று உருக்கமான கோரிக்கையை வைத்தார்.